Site icon Her Stories

கனடா எனும் கனவு தேசம்- 7

Photo by Eugene Aikimov on Unsplash



மாய உலகம்!

கனடாவில் ஆட்டோமேடிக் கார்கள்தான் என்பதால் இங்கு வந்து எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்தவுடன் என் எண்ணத்தைத் தூக்கி கிடப்பில் போட்டுவிட்டேன்.

இட வல மாற்றமும் திசை குழப்பமும் முதல் காரணம். இங்கு லைசென்ஸ் வாங்குவது மிகவும் கஷ்டம். வாங்கிய பிறகு, கார் ஓட்டும்போது விதிகளைச் சரியாகக் கடைபிடிக்காவிடில் கடுமையான நடவடிக்கை உண்டு. இவை தவிர, சாலைகளில் செல்லும் கார்களின் வேகத்தைப் பார்த்தாலே இருக்கிற தைரியமும் எகிறிக் குதித்து ஓடிவிடும்.

இங்கு எல்லாம் விவரமும் வெப்சைட்டில் இருக்கும். ஆனால், குழப்பமாகவே இருக்கும். டெஸ்ட்டின்போது பார்வையிடமாட்டார்கள். போன் எடுத்துச் செல்வதையும் தடுக்க மாட்டார்கள். கேமரா மட்டும் கண்காணித்துக்கொண்டே இருக்கும். சிறு தவறு நடந்தாலும் உடனே டெஸ்ட் எழுதுவதை நிறுத்தச் சொல்லி அனுப்பிவிடுவார்கள்.

கார்களை ரிஜிஸ்டர் செய்யாமல், இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுவது சாத்தியம் இல்லை. கண்காணிப்பு கேமராவிலேயே பிடித்துவிடுவார்கள். நண்பர்கள், உறவினர்கள் கார்களை எடுத்து வேறு யாரும் ஓட்ட முடியாது, ஏதேனும் தவறு நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கார் ஓட்டுபவரிடம், ஓட்டப் போகும் காருக்கான இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தினால் லைசென்ஸ் பறிக்கப்படலாம். பின்னர் கனடா மட்டுமல்ல; அமெரிக்காவிலும் லைசென்ஸ் வாங்குவது கஷ்டம்.

முறையாக டெஸ்ட் பாஸ் செய்தால் G1 லைசென்ஸ் கொடுப்பார்கள், அதை அடையாள அட்டையாக மட்டுமே உபயோகிக்க முடியும். அதற்குப் பிறகு முறையாக டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி எடுக்க வேண்டும். நம் நாட்டு லைசென்ஸ் காண்பித்தால் அடுத்த G2 டிரைவிங் டெஸ்ட்க்கு உடனே போக அனுமதி கிடைக்கும். இல்லாவிட்டால் 8 மாதம் கழித்து தான் டிரைவிங் டெஸ்ட்க்குச் செல்ல முடியும். டிரைவிங் டெஸ்ட் எடுக்கும் இடத்தைப் பொறுத்து டெஸ்ட்டில் சில மாற்றங்கள் இருக்கும். மற்றபடி ஆரம்பம் முதல் பார்க்கிங் வரை அனைத்து முக்கியமான விஷயங்களிலும் பாஸ் பண்ணினால்தான் லைசென்ஸ் கிடைக்கும்.

இந்த G2 லைசென்ஸ்க்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. கார் ஓட்டும்போது மது அருந்தியிருக்கக் கூடாது. காரில் எத்தனை சீட்பெல்ட் இருக்கிறதோ அத்தனை பேரை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். அனைவரும் சீட்பெல்ட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். முக்கியமாக முன் இருக்கையில் இருப்பவர். மற்ற G1 லைசென்ஸ்காரருக்கு கார் ஓட்டக் கற்றுத் தர முடியாது. முதல் 6 மாதங்களுக்கு, 19 வயதுக்கு குறைவானவராக இருந்தால் தன் குடும்பத்தைத் தவிர வேறு G லைசென்ஸ் இல்லாத யாரையும் நடு இரவில் அழைத்துச் செல்ல முடியாது.

1 வருடம் கார் ஓட்டிய பின்னரே அடுத்த G லைசென்ஸ் எடுக்க முடியும். இன்சூரன்ஸ் தொகையும் லைசென்ஸ்க்கு ஏற்ப, ஒவ்வொருவரின் டிரைவிங் ரெகார்ட்க்கு ஏற்ப மாறும். இங்கு இன்சூரன்ஸுக்கு மாதம் சுமார் 17 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

குழந்தையின் வயதிற்கு ஏற்ப அதற்கான சீட் வாங்கிப் பொருத்தினால் மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். அத்துடன், குழந்தைகள் இருப்பதற்கான அடையாள ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது நலம். வாடகைக்கு கார் எடுத்து ஓட்டும்பொழுதும் இதே விதிகள் பொருந்தும்.

குறியீடுகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். காரைப் பாதி வழியில் நம் இஷ்டத்திற்கு நிறுத்த முடியாது. சீட்பெல்ட் போடாமல் டிரைவர் அல்லது முன்இருக்கையில் யாரும் இருந்தால் காரில் எச்சரிக்கை மணி அடிக்கும், சிறிது தூரம் சென்றவுடன் நின்றுவிடும் பெரும்பாலான கார்கள். லேன், ஸ்பீட், சிக்னல், குறியீடுகளைப் பின்பற்றாமல் கேமராவில் சிக்கினால் ஃபைன் கட்ட வேண்டும்.

சாலையின் வலப்புறம் ஓட்டுவது முதலில் பழக வேண்டும். மேப் இல்லாமல் ஓட்ட முடியாது. எவ்வளவு வேகம் இருக்க வேண்டும், சிக்னலில் இட வல குறியீடு இல்லாத இடங்களில் எங்கு நிறுத்த வேண்டும், எப்பொழுது திரும்ப வேண்டும் என்பதையெல்லாம் சரியாகக் கடைபிடிக்க வேண்டும். குறைவான வேகத்தில் சென்றால் ஹாரன் அடித்தே பதற வைப்பார்கள்.

போலீஸ் பின்தொடர்வதாகச் சந்தேகம் வந்தால் காரை சாலையின் ஓரமாக நிறுத்த வேண்டும். ஆனால், காரிலிருந்து இறங்கக் கூடாது. போலீஸ் கண்ணாடியை இறக்கச் சொன்னால் இறக்கிவிட்டு, கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால், கையை ஸ்டியரிங் மேலிருந்து எடுக்கக் கூடாது.

லைசென்ஸ் வாங்கி, காரும் வாங்கிய பிறகு, டொரோண்டோ சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். நகர எல்லையைத் தாண்டி ஹைவேயைத் தொட்டவுடன் பிரம்மாண்டமான சாலை. அதில் 6, 8 லேன்களில் போகிற, வருகிற கார்களைத் தவிர, வேறொன்றும் தெரியவில்லை.

போகப் போக ஒரு மாய உலகத்தில் நுழையப் போவதற்கான முன்னோட்டம் தெரிந்தது. உயரமான கட்டிடங்கள் விதவிதமான டிசைன்களில் வானைப் பிளந்து நின்றதை பார்த்துக்கொண்டிருந்த போது, சாலைகள் குறுக ஆரம்பித்தன. வேகமாகச் செல்லும் கார்கள் நம்மை உரசிச் செல்வது போல வயிற்றில் புளியைக் கரைத்தன. திடீரென்று சாலையின் உயரம் கூடி கூடி ஓவர்ஹெட் ப்ரிட்ஜ் மேலே வேகமாக ஏறும்போது, சரவென்று உயரமான கட்டிடங்களின் கூட்டத்திற்கு நடுவே கார் நுழைந்து சென்றபோது, மாயலோகத்தில் பறப்பது போலத் தோன்றியது. உயரம், வேகம், சரசரவென்று மாறி வரும் காட்சிகள், கண்ணுக்கெட்டிய தூரம் உயரமான கட்டிடங்கள், குறுகிய சாலையில் அருகருகே அதி வேகத்தில் கார்கள், அப்பப்பா!

இந்தப் பரபரப்பில், நாங்கள் போக நினைத்த மாலுக்கான பார்க்கிங்கிற்குச் செல்ல வேண்டிய வழியைக் கோட்டைவிட்டதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. மால் போனால் போகட்டும், இந்த அனுபவமே போதும் என்று அந்தக் குறுகிய தெருக்களில் அதிக நேரம் சுற்றுவதைத் தவிர்க்க எண்ணி வீட்டுக்குத் திரும்பினோம்.

டிராஃபிக் விதிகள் இவ்வளவு கண்டிப்பாக இருப்பதாலும், சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதாலும், எல்லா இடங்களையும் கேமராவில் கண்காணிக்க முடிவதால் மட்டுமே இத்தனை வேகம் இங்கே சாத்தியம். தண்டனைகள் கடுமையாக இருப்பதும் நியாயமானதே, ஏனெனில் தவறு செய்பவர்களால் பாதிக்கப்படுவது சரியாக விதியைப் பின்பற்றுபவர்களும் தானே!

(தொடரும்)

படைப்பு:

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக இரண்டரை வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாகத் தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Exit mobile version