Site icon Her Stories

பாதைகள் உண்டு பயணிக்க

சென்ற டிசம்பர் மாதம் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் ஆற்றுப் பாலம் சேதமடைந்து போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருந்தது. பாலம் சீராகும்வரை அந்தக் கரையிலுள்ள ஊர்களுக்கு இங்கிருந்து சுற்றித்தான் செல்ல வேண்டியிருந்தது. அதாவது சில நாட்களுக்கு ஏரலில் ஆற்றுப்பாலம் கட்டப்படுவதற்கு முன்பிருந்த ஒரு காலத்துக்குச் சென்றுவிட்டிருந்தது ஊர்.

அப்போதெல்லாம் மாட்டு வண்டிகளில் ஆற்றைக் கடக்கும் வழக்கமிருந்ததாம். மணலுக்குள் இறங்கி கொஞ்சமாகத் தண்ணீர் ஓடும் வழியாகக் கடந்து அக்கரையில் ஏறினவாம் மாட்டு வண்டிகள். கரையேறுகையில் சிலநேரம் சக்கரங்கள் மணலில் புதைந்து விட்டால், வண்டியிலிருந்து இறங்கி வண்டியைத் தள்ளிவிட்டார்களாம் ஆண்கள்.

நாங்களும் மாட்டு வண்டிகளை அதிகமாகப் பார்த்து வளர்ந்தவர்கள்தான். நாங்கள் தெருவில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கும்போதுதான் விறகு வண்டி வரும். வண்டியில் குவிக்கப்பட்டு வரும் விறகு, வாங்குபவரின் தேவைக்கு ஏற்ப நிறுக்கப்பட்டு (ராத்தல், அந்தர் என்ற கணக்கில் நிறுத்தது நினைவிருக்கிறது) வீட்டுக்கு முன்னால் இறக்கப்படும். இப்படி இறக்கிப் போட்ட விறகுகளை வீட்டு வளவில் அல்லது தட்டடியில் கொண்டு அடுக்க தெருப் பிள்ளைகளைத்தான் அழைப்பார்கள். ஏழெட்டு பிள்ளைகள் நான்கைந்து விறகுகளாகக் கொண்டு போய் அடுக்கி முடித்துவிடுவார்கள் விளையாட்டாகவே.

ஆனால் எல்லாப் பிள்ளைகளும் விறகு அடுக்குவதை விரும்பிச் செய்தார்கள் என்று சொல்ல முடியாது, கொஞ்சம் முணுமுணுப்போடும் முகச்சுளிப்போடும் செய்த பிள்ளைகளும் உண்டுதான். வேலை முடிந்தவுடன் ஆளுக்கு மூன்று பாக்கு மிட்டாய்கள் கூலியாகக் கிடைக்கும்!

இதேபோலச் சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது “ஏ பிள்ளைலுவோ! ஓடிவாங்கோ! அரைக்காசம்மா கருப்பட்டி தாரேன்”, என யாராவது மாமியோ சாச்சியோ அவர்கள் வீட்டு வாசலில் நின்று கூவி அழைப்பதுண்டு. குரல் கேட்டதும் அந்த வீட்டு வாசலுக்கு ஓட, கூடி நின்று அவர்கள் தரும் சிறு சிறு கருப்பட்டித் துண்டுகளை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு விளையாட்டைத் தொடர்வோம். இந்த திடீர்க் கருப்பட்டி விநியோகத்திற்கு ஒரு காரணமும் உண்டு. வீட்டில் ஏதாவது மோதிரம் கம்மல் போன்ற சிறு நகைகள் காணாமல் போனால் அரைக்காசு அம்மா என்ற பெண் அவுலியாவுக்கு நேர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்தது அன்று. பொருள் திரும்பக் கிடைத்ததோ இல்லையோ அறிவதற்கில்லை. ஆனால் எங்களுக்குக் கருப்பட்டி கிடைத்தது விளையாட்டின் நடுவே சப்புக்கொட்ட…

விறகு ஏற்றி வரும் வண்டியைச் சக்கடாவண்டி என்று சொல்வோம். அரிதாகச் சில வீடுகளில் சொந்த பயன்பாட்டுக்கென வண்டி வைத்திருப்பார்கள். அழகான வண்ணப் பாயினால் மேற்புறம் மூடி வண்டியின் உட்புறத்தில் மெத்துமெத்தென்று வைக்கோல் போட்டு அதற்கு மேல் மெத்தையும் போட்டு ஜம்மென்றிருக்கும் வில்வண்டி. அப்படி வில்வண்டியில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் வண்டியின் பின்பக்கம் கால்களைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தவாறு செல்வது, தனி குதூகலம்தான். வில்வண்டிப் பயணம் அடிக்கடி வாய்த்ததுமில்லை. வில்வண்டியை மறக்காமலிருப்பதற்கு இதுவும் கூட காரணமாயிருக்கலாம்.

பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்த கையோடு புதுமணத் தம்பதிகளை தர்காவுக்கு அழைத்துச் சென்று ஃபாத்திஹா ஓதி, உண்டியலில் ஒரு சிறிய தொகையைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கமிருந்தது. அப்படிச் செய்வதை மாலைப்பணம் போடுவது என்பார்கள்.

மாலைப்பணம் போடுவதற்காகச் செல்லும் தர்காக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வெவ்வேறாகவும் இருப்பதுண்டு. எங்கள் வாப்பா வீட்டில் பொறையூர் ஷேக் சிந்தா மதார்ஷா தர்கா என்றால், எங்க ம்மாவின் தங்கையான சாச்சி வீட்டில் கங்கை கொண்டானுக்குச் செல்வது வழக்கம். ம்மாவின் லாத்தாவான எங்க பூமா வீட்டிலோ, தக்கலை பீர் முகம்மது அப்பாவைச் சென்று தரிசிக்காமல் இருந்ததில்லை.

எங்கள் சின்னவாப்பாவின் மனைவியான சாச்சியின் ஊர் ஏரலை அடுத்த சூழவாய்க்கால். அவர்கள் சென்றது ஆறுமுகமங்கலத்துக்கு அருகிலுள்ள மரைக்காம்பள்ளிக்கு. சின்னவாப்பா சாச்சியுடன் ஒரு முறை மரைக்காம்பள்ளிக்கு வில்வண்டியில் சென்றதும் நான் கம்பியைப் பிடித்துக்கொண்டு கால்களைத் தொங்கவிட்டபடி உட்கார்ந்து வயல்வெளியை வேடிக்கைப் பார்த்து வந்ததும் சாச்சி அணிந்திருந்த எலுமிச்சை மஞ்சள் நிற ‘இரவும் பகலும்’ சேலையின் முந்தானை காற்றில் படபடத்தது ஒரு சிறகு விரித்த வண்ணத்துப் பூச்சி போலத் தோன்றியதும் ஏதோ அழகிய கனவுபோல் மின்னி மறைகிறது கண்ணுக்குள்.

அப்போதைக்கு இப்போது எங்கள் ஊரின் மாற்றங்களைப் பார்க்கும்போது எனக்கே ஏதோ வேறு ஊர் போலத்தான் தோன்றுகிறது. இப்படி இருக்க என் வாப்பா மாமா வயதினருக்கெல்லாம் எத்தனை மாற்றமாய்த் தோன்றுமோ! பாலமில்லாத ஆற்றில் தண்ணீர் நிறைந்து ஓடும்போது அந்தக் கரைக்கு போகவே முடியாதே என்றால் வாப்பா சிரிக்கிறார்கள், “ஏ பிள்ள அப்பொம்லாம் தோணிலோ ஓடிக்கிட்டிருந்துச்சி ஏரல்ல” என்று சொல்லி. பாலமில்லாத ஏரலைக் கற்பனை செய்வதே எனக்குச் சற்றுக் கடினமாக இருந்ததென்றால், ஏரல் ஆற்றில் தோணியும் ஓடியதாகக் கேட்டபோது மிகுந்த வியப்பாகவும் இருந்தது. ஏரல் பஜாரிலிருக்கும் சவுக்கையம்மன் கோயிலைத்தாண்டி நேரே நடந்தால் ஒரு படித்துறை உண்டு. இந்தத் துறையிலிருந்துதான் ஆற்றில் நீர் ததும்பி ஓடிய காலத்தில் இக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள சேதுக்கு வாய்த்தானுக்கு தோணி ஓடியதாம். தலைக்குக் காலணா அதாவது மூன்று பைசா கட்டணத்தில். அதன்பிறகு ஆற்றுப்பாலம் கட்டிய பிறகு தோணியை எங்கு கவிழ்த்து வைத்தார்களோ எப்போது பிரித்தெடுத்தார்களோ!

ஏரல் முஸ்லிம்களிடையே கொழும்பிற்குச் சென்று வியாபாரம் செய்தவர்கள் கணிசமாக இருந்தார்கள் அப்போது. கொழும்பிற்குச் செல்ல வேண்டுமெனில் தனுஷ்கோடி சென்றுதான் கப்பலேற வேண்டும். ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு இப்போது முக்காணி பழையகாயல் வழியாகச் செல்லும் திருச்செந்தூர் ரோடு அப்போது கிடையாது. எனவே பேட்மாநகரம் வாகைக்குளம் வழியாக புதுக்கோட்டை வந்துதான் தூத்துக்குடி சென்றிருக்கிறார்கள். அங்கு தூத்துக்குடி இரயில் நிலையத்துக்கு வந்து இரயிலேறி முதலில் மதுரைக்குச் செல்ல வேண்டும். அன்று சென்னையிலிருந்து கொழும்பு வரை போட்மெயில் (Boat Mail) எனும் ரயில்வண்டி ஒன்று ஓடியது. சென்னையிலிருந்து மதுரை வழியே தனுஷ்கோடி வரை ரயில், தனுஷ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னார் வரை கப்பல், மீண்டும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை ரயில் என சென்னையிலிருந்து ஒரே பயணச்சீட்டில் கொழும்புவரை செல்லலாம்.

ஏரல் ஊர்க்காரர்கள் தூத்துக்குடியிலிருந்து இரயிலில் மதுரை சென்று மதுரை இரயில் நிலையத்திலேயே கொழும்பு வரைக்கும் பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து வரும் போட் மெயிலைப் பிடிப்பார்கள். அதில் ஏறியதுமே நேரடியாக தனுஷ்கோடி சென்றுவிடவும் முடியாது. வழியில் தூத்துக்குடி அருகிலுள்ள தட்டப்பாறையிலோ அல்லது இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள மண்டபத்திலோ இறங்கி அங்கிருக்கும் சுகாதார முகாமுக்குச் செல்ல வேண்டும். அங்கு இங்கிருந்து இலங்கை செல்பவர்களுக்கு, தொற்று நோய்ப் பரவலைத் தடுக்க உடைகளை வெள்ளாவியில் வைத்து எடுப்பது முதலிய தடுப்பு நடவடிக்கைகளைச் செய்வார்களாம். அதற்கு இரண்டொரு நாள்களும் ஆகிவிடக்கூடும். அதற்குப் பிறகு தனுஷ்கோடிக்குச் சென்று கப்பலேறி, பின்னர் தலைமன்னாரில் இறங்கி ரயிலேறி கொழும்பை அடைந்திருக்கிறார்கள். இன்றைக்கெல்லாம் தனுஷ்கோடியிலிருந்து முப்பது கிமீ தூரத்திலிருந்த தலை மன்னாரை அடைய இத்தனை நீண்ட பயணம்!

பயணம் இத்தனை சிரமங்களுடன் இருந்ததால், கொழும்பில் வியாபாரம் செய்தவர்கள் அடிக்கடி ஊர் வந்து செல்வது என்றில்லாமல் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறைதான் வந்து சென்றிருக்கிறார்கள். அதனால்தான் போலும் கொழும்பிலிருந்து அன்றைக்குக் குடும்பத் தலைவர் ஊருக்கு வந்துவிட்டால், “கொழும்பாளு வந்தாச்சு! கொழும்பாளு வந்தாச்சு!” என ஒரே கோலாகலமாய்க் கிடந்திருக்கின்றன இல்லங்கள்.‌ இடியாப்பம் அவித்து ஆட்டுக்கறி ஆக்கவும், ஆப்பம் சுட்டு கோழிக்கறி ஆக்கி கள்ளிச்சொட்டுப் போல தேங்காய்ப்பால் பிழிந்து வைக்கவும், அரிசி மாவில் ரொட்டி சுட்டு சேவல் அறுத்துக் கறி ஆக்கி வைக்கவுமாக வீடே கமகமவென்றிருக்குமாம் அப்போது. கொழும்பு வருமானம் இருந்த வீடுகளில் பீங்கான் கோப்பைகள், எனாமல் பூப்போட்ட தட்டுகள் (இவற்றை ரக்காவி என்போம்), பூப்போட்ட ஸஹன், வெற்றிலைப் படிக்கம் போன்ற பொருட்களையும் கொழும்பிலிருந்து கொண்டு வந்து புழங்குவார்கள். அங்கிருந்து அலமாரி, மேசை என மரச்சாமான்களும் செய்து கப்பலில் கொண்டு வருவதுண்டு. அன்று கொழும்பிலிருந்து வந்த மர அலமாரிகளும் கடிகாரமும் தட்டு முட்டுச் சாமான்களும் இன்றும் புழங்கும் வீடுகள் உள்ளன ஏரலில்.

கொழும்பு பொருள்கள், ஏரலில்

கொழும்பாளுகளின் போக்கும் வருகையும் நின்று சில ஆண்டுகளுக்கெல்லாம் பிறகுதான் ஊரிலிருந்து ஆண்கள் வேலைக்காக அரபுநாட்டுக்குச் செல்லும் காலம் தொடங்கியது. 1950லேயே ஏரலின் முதல் பொறியாளர் என்ற பெருமைக்குரியவராகியிருந்த பி.எம். அப்துல் ஜப்பார் அவர்கள், 1972ல் மதுரை பொதுப்பணித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.‌ அப்போதுதான் கீழக்கரையின் புகழ்பெற்ற தொழிலதிபர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் ஐக்கிய அமீரகத்தில் தன் கட்டுமானத் தொழிலை விரிவாக்கும் முகமாக, துபாய் நகரில் ஈ.டி.ஏ. அஸ்கான் என்ற நிறுவனத்தை உருவாக்கும் ஏற்பாடுகளில் இருந்தார்.

ரத்தன் டாடாவுடன் ஈ டி ஏ ஆஸ்கான் நிறுவனர் பி. எஸ். அப்துல் ரகுமான்

அந்தப் பணிகளுக்காகத் தொடர்பு கொள்ளப்பட்ட காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொறியாளர் ஷேக், கிண்டி பொறியியல் கல்லூரியில் தன் வகுப்புத் தோழராயிருந்த ஏரலின் அப்துல் ஜப்பாரையும் தன்னுடன் இணைந்து கொள்ள வேண்ட, அவரும் இசைந்து அஸ்கான் நிறுவனத்தின் மேலாளராக துபாய் புறப்பட்டுச் சென்றார். இவ்வாறாகத் தொடங்கியது ஏரலின் முதல் அமீரகத் தொடர்பும் பயணமும்.

கீழக்கரை என்ற ஊரோடு அன்றுவரை ஏரலுக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. ஆனாலும் எங்கள் ஊரில் ஒருவர் பெற்ற உயர் கல்வி, அதிலும் மதிப்பு வாய்ந்த அன்றைய பொறியியல் கல்வியானது, தொலைதூரத்தில் தொடங்கப்பட்ட ஒரு கீழக்கரை நிறுவனம், ஏரல் ஊரின் வசதிவாய்ப்பற்ற பலரின் குடும்பத்தைக் கை தூக்கிவிடுவதற்குத் துணை நின்றதை எப்போதும் பெருமிதத்துடன் நினைத்துக் கொள்வேன். ஏனெனில் இத்தகு பெருமைக்குரியவர் எங்களின் தாய்மாமாவாயிற்றே!

அன்று தொடங்கிய அரபுநாடுகளுக்கான பயணங்கள் இன்றும் தொடர்கின்றன ஊரில். இன்று மதுரையிலிருந்தோ திருவனந்தபுரத்தில் இருந்தோ நான்கு மணி நேரங்களில் எட்டி விடும் நாட்டை அடைய, அன்று எங்கள் வாப்பா குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஐந்து நாட்கள் கப்பலில் பயணிக்க வேண்டியிருந்தது. கொழும்பை விடப் பல மடங்கு தூரம். அப்போதுவரை கேள்விப்பட்டிராத நாடும் நகரமும். வீட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் மகனோ கணவனோ, இன்னும் இரண்டு ஆண்டுகளோ, அதற்கும் மேலோ காலங்கள் கழிந்த பிறகுதான் திரும்ப வந்து கண்ணில் விழிக்க முடியும் என்ற நிலையில், மனதின் கலக்கத்தை கண்களில் கண்ணீராய் வழிய விட்டு நின்றிருந்தனர் வீட்டுப் பெண்கள். வழிந்து விடக் கூடாதேயென்று இறுக்கிப் பிடித்த கண்ணீரோடு வண்டியேறிச் சென்றனர் ஆண்கள். இனி திரும்பி வந்து சேரும்வரை நீண்ட தொலைவுகளில் சிறைப்பட்டிருக்கும் உணர்வுகளைப் பத்திரமாய் ஏந்தி வந்து உரியவர்களிடம் விடுதலை செய்துவிட்டு அங்குமிங்குமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன கடிதங்கள்.

“தபால்காரரே எங்க வூட்டுக்குத் தபால் உண்டா?” என வினவிய வண்ணம் தலையிலிட்ட முக்காட்டுடன் வாசலை ஒட்டியபடி நின்று குரல் கொடுத்த என் ம்மாவின் தோற்றம் சித்திரமாகப் பதிந்துள்ளது மனதில்.

வாப்பாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை வந்து போகும் அந்த ஒன்றரை இரண்டு மாதங்களும் அப்படி ஒரு கொண்டாட்டமாக இருக்கும் பிள்ளைகளுக்கு. வீட்டிற்கே வாப்பா வாசம் வந்துவிடும் அந்த நாள்களில். கொண்டு வந்திருக்கும் பெட்டியைத் திறந்து சாமான்களைப் பங்கிடுவது ஒரு திருவிழா போலவே நடக்கும். உறவினர்கள் எல்லாருக்கும் ஏதாவது ஒன்று நிச்சயமாகக் கிடைக்கும்படி பங்கு வைத்து விடுவார்கள் ம்மாக்கள்.
டேங்க் பவ்டர், கடல்பாசி (சைனா கிராஸ்), குவாலிட்டி ஸ்ட்ரீட் சாக்லேட், சோப், ஷேம்பு, கவுன், ரிப்பன், செருப்பு, காந்தம் வைத்த பென்சில் டப்பா, ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில், வாசனை ரப்பர், சென்ட், ஸ்ப்ரே, ஒடிகொலோன், கோடாரித் தைலம், கோல்ட் மெடல் ஆயில், ஸ்லோன்ஸ் லினமென்ட், டைகர் பாம், அது இது என அதுவரை கேள்விப்பட்டிராத விதவிதமான புதுமையான பொருள்களைத் தொட்டுப் பார்ப்பதும் முகர்ந்து பார்ப்பதுமாக அதுவரை காணாத ஓர் உலகில் உற்சாகக் கூத்தாடுவார்கள் பிள்ளைகள்.

எப்போதும் சுவற்றலமாரியிலிருந்து எடுத்து உடுத்தும் சேலைகளைத் தவிர்த்து, பீரோவிலுள்ள அழகழகான சேலைகளை அணிந்திருக்கும் தாயையும் அப்போதுதான் பார்க்க முடியும் பிள்ளைகளுக்கு. வாப்பாக்களின் வருகையில் எல்லாவற்றையும் விட பிள்ளைகளுக்கு மிகப் பிடித்ததாய் இருந்தது அப்படி அழகான ம்மாக்களைப் பார்ப்பதுதான்.

பிழைப்பிற்காக இலங்கையும் துபாயும் சென்ற நாள்களிலும் தங்கள் இறைவனுக்காக மக்காவுக்கும் மதினாவுக்கும் சென்று ஹஜ் செய்தவர்களும் இருந்தார்கள் அன்று. இப்போது போலல்லாமல் அன்று ஹஜ் செய்தவர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் எனும் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் எல்லோருக்கும் கடமையன்று. அதற்கான வசதி வாய்ப்பைப் பெற்றவர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்தல் கட்டாயக் கடமை. அப்போதெல்லாம் தனியார் பயணக் குழுமங்களோ முகவர்களோ இல்லாத காலம். அன்று தமிழ்நாட்டிலிருந்து ஹஜ்ஜுக்காகச் செல்லும் பயணிகள் ஹஜ் சர்வீஸ் சொசைட்டி மூலமாகத்தான் சென்றனர். ஹஜ் சொஸைட்டி 1996 வரை மும்பையிலிருந்து மட்டுமே செயல்பட்டது.

அப்போதெல்லாம் மக்கா நகரம் செல்வதற்கு அன்றைய பம்பாயிலிருந்து சவூதி அரேபியத் துறைமுகமான ஜித்தா வரை கப்பலில் பயணம் செய்வதுதான் ஒரே வழி. பம்பாயிலிருந்து ஜித்தா சென்று சேர்வதற்கு ஒரு வாரம் ஆகும். ஏரலிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து பம்பாய்க்கு இரயிலில் செல்ல குறைந்தது மூன்று நாள்களாகும். ஆகப் போய்வருவதற்கு ஆகக்கூடிய இருபது நாட்களையும் சேர்த்து ஹஜ்ஜுக்குச் சென்று திரும்ப மூன்று மாதங்களாகிவிடும். அப்போது ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இங்கிருந்து அரிசி, பருப்பு, புளி, எண்ணெய் முதலான மளிகைப் பொருள்கள், மண்ணெண்ணெய் அடுப்பு, அடுப்பெரிக்க மண்ணெண்ணெய் எனத் தேவையான பலவற்றையும் சேகரித்து எடுத்துக்கொண்டே சென்றிருக்கிறார்கள்.

மறக்காமல் கூடவே மாசியையும். மாசி என்பது ஒரு குறிப்பிட்ட வகை மீனைக் காயவைத்துப் பதப்படுத்திய, கருவாட்டிலிருந்து சற்றே வேறுபட்ட ஒரு உணவுப் பொருள். மாசிச் சம்பல் இடிப்பது, மாசிச் சம்பல் பொரிப்பது, மாசி ஆணம், மாசித் துவையல் என ஊர்ச்சமையலில் அடிக்கடி மாசி புழங்கிய வண்ணமே இருக்கும். சவூதியின் வலுவான செம்மறி ஆட்டு இறைச்சியின் மணம் இங்கே மென்மையான வெள்ளாட்டு இறைச்சியின் மணத்துக்குப் பழகியவர்களின் சுவைக்கு அதிகம் ஒத்துப்போவதில்லை. அதனால் பெரும்பாலும் மாசியை இடித்துக் கையோடு கொண்டு சென்று வேண்டும்போது சம்பலாக்கி உண்டுகொள்வார்கள்.

புனிதப் பயணம் செய்ய நாடி ஊரிலிருந்து ஒருவராகவோ, தம்பதிகளாகவோ அல்லது ஒரு குழுவாகவோ புறப்படும் அனைவருக்கும், அதேபோல புனிதப் பயணத்தை நிறைவேற்றி ஊருக்குத் திரும்புபவர் அனைவருக்கும் சிறப்பான வழியனுப்புதலும் வரவேற்பும் அளிப்பது ஊரில் அன்றும் இன்றும் உள்ள பண்பாடு. ஹஜ் செய்ய நாடியிருப்பவர்கள் அவர்களின் பயணத்துக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியபின், இறைவன் நாடினால் இவ்வாறு இந்த நாளில் தாம் ஹஜ் செய்யப் புறப்பட இருப்பதாக ஊராருக்கு அறிவிப்பார். அதற்குப்பின் ஒரு நாள் உறவினர்களை அழைத்துத் தங்கள் வீட்டில் விருந்தளிப்பதும் உண்டு. ஹஜ்ஜுக்குப் புறப்படும் நாளில் அவர்களின் வீட்டில் ஊராரும் உறவினரும் கூடி அவர்களிடம் கைகொடுத்து ஸலாம் கொடுப்பார்கள்.

ஸலாம் கொடுப்பது என்றால் இரு பெண்கள் அல்லது இரு ஆண்கள் எதிரெதிரே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்று, அஸ்ஸலாமு அலைக்கும் என ஒருவர் ஸலாம் சொல்ல அலைக்கும் ஸலாம் என அதற்கு மற்றொருவர் பதிலளித்துவிட்டு, ஒருவர் கரங்களை மற்றொருவர் பற்றியபடி நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது இறைவனின் சாந்தியையும் சமாதானத்தையும் கோருவதாகும்.

அன்று ஹஜ்ஜுக்குச் செல்லும் வசதிபடைத்தவர்கள், குழந்தைகளை எல்லாம் வளர்த்து ஆளாக்கி அவர்களுக்குத் திருமணமும் செய்வித்துப் பார்த்த பிறகே ஹஜ்ஜைப் பற்றிச் சிந்தித்தார்கள். எனவே ஹஜ்ஜுக்குப் புறப்பட்டவர் தன் எல்லாக் கடமைகளும் முடிந்த நிலையில், பயணத்தின்போது எதுவானாலும் ஆண்டவன் வகுத்த வழி என்ற ஆறுதலான மனநிலையில் உறவுகளிடம் இறுதி விடை பெற்றுச் செல்வது போன்றதொரு உணர்வுடன்தான் சென்றார். அதனால் அன்று வழியனுப்பும் நாளில் கட்டித் தழுவி கண்கலங்கித் தேம்பும் காட்சிகள் அருகில் நின்றிருப்பவர் கண்களையும் நிறைத்தன.

ஹஜ்ஜுக்குப் புறப்படுபவர் தன் இல்லத்தில் கூடியிருக்கும் உற்றார் உறவினரிடம், ‘நான் உங்களில் யாருக்காவது அறிந்தோ அறியாமலோ தவறு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காகவும் ரஸுலுக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கூறி விடைபெறுவதும் ஊரில் காணப்படும் ஒரு அழகான பண்பாடு. இதன்பின் ஹஜ்ஜுக்குச் செல்லும் ஆண்களை அவர்கள் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்குக் கூட்டிச் செல்வார்கள். அங்கு அவர்களுக்காக ஒரு சிறப்புத் தொழுகை நடைபெறும். அதை முடித்ததும் அங்கு குழுமியிருக்கும் ஆண்கள் ஒன்று சேர ‘நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டு பயணம் மேற்கொள்பவர்களை வழியனுப்பி வைப்பார்கள். வீட்டிலிருந்து காரும் வேனும் நிறையுமாறு ஆண்களும் பெண்களுமாய் உறவுகள் சேர்ந்து இரயில் நிலையம் வரை சென்று வழியனுப்புவது பொதுவான வழக்கம். ஊர் ஜமாத்தின் சார்பிலும் தனியாகக் காரிலோ வேனிலோ ஆண்கள் இரயில் நிலையம்வரை சென்று வழியனுப்புவார்கள்.

ஹஜ் செய்ய வாய்ப்பதும் அதை நிறைவேற்றுவதும் இஸ்லாமியர் ஒருவரின் வாழ்வில் அல்லாஹ் வழங்கிய பெரும் பேறாகக் கருதப்படுகிறது. ஹஜ்ஜை முடித்து வருபவர் தன் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த குழந்தையைப்போல் திரும்புவதாக ஒரு நம்பிக்கை உண்டு இஸ்லாமியரிடத்தில். ஹாஜிகள் என்போர், மார்க்கக் கடமையை நிறைவேற்றி வந்தவர்கள் என்பதோடு தாங்கள் உயிரினும் மேலாக அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் தங்களுடைய அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த மண்ணை, அவர்கள் அடங்கியிருக்கும் தலத்தைக் கண்டு வந்திருப்பவர்கள் என்ற சிறப்பும் சேர்ந்து ஹாஜிகளுக்கு ஊர் மக்களிடையே ஒரு உயர்ந்த மதிப்பு உருவாகிவிடும். அவர்கள் தம் ஹஜ்ஜை சிறப்புற நிறைவேற்றி ஊருக்குத் திரும்பும்போது ஊர் ஜமாத்தின் சார்பாகவும் உற்றார் உறவுகளுமாகப் பலரும் இரயில் நிலையம் சென்று தக்பீர் முழங்கி ஹாஜியார்களையும் ஹாஜிமாக்களையும் வரவேற்று அழைத்து வருவார்கள். ஹாஜிமாக்கள் அவரவர் இல்லங்களை அடைய, ஹாஜியார்கள் பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டு வீடு திரும்புவார்கள். ஹஜ்ஜுக்குச் செல்லும்போது செய்ததைப் போலவே, ஹஜ்ஜை முடித்துத் திரும்பிய ஹாஜிகளிடமும் ஒவ்வொருவராகச் சென்று கரங்களைப் பற்றி ஸலாம் கொடுப்பார்கள்.

ஒருவர் ஹஜ்ஜுக்குப் போய் வந்தால் அவருடைய எல்லா உறவினர்களும் ஊர்மக்களும் அவருடைய இல்லம் சென்று நலம் விசாரித்து ஹஜ்ஜை முடித்து வந்ததற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்து ஸலாம் கொடுத்து வருவது மரபு. அப்படிச் செல்பவர்கள் அனைவரும் ஹாஜிகள் தரும் மக்கா நகரத்துப் பேரீத்தம் பழங்களைச் சுவைத்துவிட்டு ஜம்ஜம் எனும் வற்றாத நீரூற்றின் புனித நீரையும் பருகி வருவார்கள், இது போன்ற பேறு தங்களுக்கும் வாய்க்க‌வேண்டும் என்ற வேண்டுதலுடன்…

ஏரல் தாமிரபரணி ஆற்று நீரில் தொடங்கினோம்; மக்காவின் ஜம்ஜம் ஊற்று நீர்வரை நீண்டதொரு பயணம்தான் செய்திருக்கிறோம் போலும்.

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.

Exit mobile version