Site icon Her Stories

தண்ணீர் ஊற்றின் மீன்கள் எங்கே?

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தாலுகா, தங்கச்சிமடம் பஞ்சாயத்து பகுதியான தண்ணீர் ஊற்று கிராம் அருமையான சுற்றுச்சூழல் கொண்ட இடம்.

‘நன்னீர் கடல் நீருக்குள்…
குடிநீருக்கு பஞ்சம் இல்லை…’

என்றுகூறுவார்கள். சுத்தமான காற்று, அமைதியான கடல், அழகான சூழல், வசிப்பதற்கு ஏற்ற இடம். யாருக்குத்தான் பிடிக்காது? எங்கள் ஊர் இது. தீவுக்கே தொழில் சொல்லிக் கொடுத்தது எங்கள் தண்ணீர் ஊற்று கிராமம்.

நான் 2005இல் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது இது. அன்று ஞாயிற்றுக்கிழமை, பள்ளி விடுமுறை நாள். அப்பா கடலுக்கு செல்லத் தயாராக இருந்தார்.

“அப்பா நானும் உங்களுடன் கடலுக்கு வருகிறேன்,” என்று அடம்பிடித்து அழுதேன். மறக்கமுடியாத நினைவுகள் அவை. “நீங்கள் கடலுக்கு செல்லுங்கள்; நான் வெளியில கடற்கரையில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறேன். ப்ளீஸ் அப்பா!” என்று அப்பாவிடம் கெஞ்சியபடி அழுதேன். உடனே அப்பா, “சரி வா. எங்கும் செல்லக்கூடாது; கடற்கரையிலேயே அமர்ந்திருக்க வேண்டும். இல்லையெனில் மறுபடியும் உன்னை நான் கடலுக்குக் கூட்டி செல்ல மாட்டேன்”, என்று சொல்ல, அப்பாவுடன் கைகோத்து நடந்து சென்றேன்.

சென்ற இடமெல்லாம் காடு, கால் வைக்கும் இடமெல்லாம் சங்கு முள், காட்டுமுள். சங்குமுள் குத்தும் என்று தன் தலையில் மேல் என்னை தூக்கி சென்றார் அப்பா…

போகும் வழியெல்லாம் பனைமரங்கள் இருந்தன.

“அப்பா எனக்கு நொங்கு வேண்டும்”, என்று கேட்டவுடனேயே, என்னை இறக்கிவிட்டு பனைமரம் ஏறி, ஒரு குலை நுங்கையும் அவர் வெட்டித் தள்ள, இருவரும் அதை வெட்டித் தின்றோம். வயிறு நிரம்பிவிட்டது. போகும் வழியில் பெரிய பெரிய திடல்களைத் தாண்டிச் சென்றோம். திடல்களில் முள்ளிச் செடிகள் காற்றில் உருண்டு ஓடின, ஓடிய பந்துகளை விரட்டிப் பிடித்தேன்.

விளையாடியபடி கடற்கரையை வந்தடைந்தோம். கடற்கரை ஓரத்தில் கிடக்கும் சிப்பிகளையும் சங்குகளையும் கை நிறைய எடுத்துக் கொண்டு சட்டையின் முன் பகுதியில் அடைத்து வைத்து, ‘சலக் சலக்’ என்ற ஓசையுடன் நடந்தேன். அதில் ஒரு ஆனந்தம்!

அப்பா தன் கட்டுமரத்தையும் வலைகளையும் கருவேல மரப்புதர் உள்ளே ஒளித்து வைத்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவார். தன் கட்டுமரத்தையும் வலையையும் வெளியே எடுத்து வந்தார் அப்பா.

“பாப்பா சேட்டைகள் செய்யக்கூடாது, நான் கடலுக்குச் செல்கிறேன். வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். நீ என்ன செய்கிறாய் என்றால் கடலுக்கு வெளியில் அல்லது கடற்கரையிலேயே குளி, விளையாடு. நான் வரும்வரை அங்கேதான் நிற்க வேண்டும். வேறு யாராவது உன்னிடம், ‘உன் அப்பா அங்கே நிற்கிறார் வா’ என்று கூப்பிட்டால் போகக்கூடாது. அப்பா வந்து கூப்பிட்டால் மட்டும்தான் வர வேண்டும். சரியா?”, என்றார்.

ஏனென்றால் அந்த இடம் ஒரு புனித ஸ்தலம். ஆண்டி, சாமியார்கள் முதல் அகோரி சாமியார்கள்வரை வந்து நீராடிவிட்டுச் செல்வார்கள். அதனால் அப்பாவுக்குக் கொஞ்சம் பயம். பெண் குழந்தையாக இருக்கிறேன் அல்லவா?

“சரி அப்பா! போய் வாங்க…”, என்று சொல்லிவிட்டு, கடலுக்குள் ‘தொப்’ என்று குதித்து விளையாடினேன். அப்பா கட்டுமரத்தைத் தள்ளிக் கொண்டு, கடலில் சென்று விட்டார். அப்பா கண் எட்டும் வரை நான் அவருக்கு டாட்டா காட்டிக்கொண்டே இருந்தேன். அப்பா என் கண் பார்வைக்கு அப்பால் போய்விட்டார். உடனே நான் தனது தலையில் மூடிக் கொண்டு வந்த துப்பட்டாவை எடுத்து கடல் நீருக்கு அடியில் விட்டு, சிறு சிறு மீன்களைப் பிடித்து மகிழ்ச்சியாக அதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்தேன். அப்பாவிடம் காட்டி மகிழ்ச்சி அடைவதற்காக….

ஒரு மணி நேரம் ஆகிவிட்டது… இன்னும் அப்பா வரவில்லை. எட்டி எட்டிப் பார்த்தபடி, கடலுக்குள் மூழ்கியும் எழுந்தும் மூழ்கியும் எழுந்தும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பா வந்துவிட்டார்! உடனே சந்தோசம் தாங்கவில்லை.

“ஐ அப்பா வந்தாச்சு” என்று ஓடிப்போய், அப்பாவின் கட்டுமரத்தை இழுத்து கரைக்குக் கொண்டு வந்தோம். தன் கட்டுமரத்தில் இருக்கும் அரைச்சான் என்ற பைக்குள் இருந்து சில மீன்களை எடுத்து வெளியே கொண்டு வந்தார் அப்பா. கட்டுமரத்தையும் வலையையும் சுருட்டி மறுபடியும் கருவேல மரப்புதருக்குள் ஒளித்து வைத்தார்.

“அந்த மீன் பெயர் என்ன?” என்று கேட்டேன். அப்பா உடனே, “இந்த மீன் பெயர் கிழிஞ்சான்” என்று கூறினார். “அப்பா பார்க்க அழகாய் இருக்கிறது. இந்த மீனை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டால், “வா!”, என்று கூட்டிக்கொண்டு போய் தீ மூட்டி, அதில் அந்த மீனை சுட்டு எனக்கு கொடுத்தார். மிகவும் அருமையாக இருந்தது. “அப்பா! மிகவும் ருசியாக இருக்கிறது அப்பா! சூப்பர் பா,” என்று சிரித்துக் கொண்டே சாப்பிட்டேன். அந்த அழகிய தருணம் இன்னும் என் கண்ணில் காட்சியாக விரிகின்றது.

அப்பொழுதெல்லாம், பஞ்சு மரங்களைக் கொண்டு கட்டுமரங்களைத் தயாரித்து வைத்து மீன் பிடித்தார்கள். முன்பெல்லாம் தகவல் பரிமாற்றம் இல்லாதபோது, கடற்கரையிலேயே இரவு உறங்கிவிட்டு காலையில் கடலுக்கு சென்ற காலமெல்லாம் ஓடிவிட்டது. அம்மா, சித்தி, அத்தை சங்கு எடுத்து கறி சமைத்து வியாபாரம் செய்து வருமானம் ஈட்டிய காலம் ஒரு காலம்.

கட்டுமரங்களையும் படகுகளையும் நிறுத்த இடம் இல்லாமல் பனைமரம், கருவேலமரங்களுக்கு இடையே மறைத்து வைத்தது எல்லாம் நினைக்கும்போதே என் கண்கள் கலங்குகின்றன.

“தண்ணீர் ஊற்று கிராமமா இது?” என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், “ம்ம்ம்” என்ற ஒற்றைச் சொல் அனைத்தையும் மறைக்கிறது. என் கிராமத்தில் இப்பொழுது பாசிகூட ஒதுங்குவதில்லை. சங்குகள், சிப்பிகள் ஒதுங்கும் இடம் ஒன்றுமே ஒதுங்குவதில்லை. சிறுவயதில் குட்டி குட்டி மீன்களை கறை வலியைப் பார்ப்போம். துப்பட்டாவில் மீன் பிடித்து விளையாடிய காலம் அன்று. இன்று ஒரு மீன் கூட கரைவலியே பார்க்கக்கூட முடியவில்லை. இப்பொழுது கிளிஞ்சான் மீன் எல்லாம் இருக்கிறதா? இல்லையா? என்று கூடத் தெரியவில்லை.

ஒரு படகில் 50 கிலோ மீன் பிடிக்கும் இடம் தண்ணீர் ஊற்று கிராமம். இப்பொழுது மூன்று கிலோ கூட வரத்து வரவில்லை. ஏன் இப்படிப்பட்ட நிலைமை என் கிராமத்திற்கு வந்தது? விசைப்படகு பெருக்கத்தினாலா? அல்லது நவீனத்தின் வளர்ச்சியினாலா? என்று புலம்பித் தவித்த நாள்கள் உண்டு. எத்தனை கட்டுமரங்கள். எத்தனை படகுகள்… வெளியூர் படகுகள் வந்து மீன் பிடித்தது எங்கள் தண்ணீர் ஊற்று கிராமத்தில் மட்டும்தான்.

ஆனால் இன்று ஒன்று இரண்டு படகுகளை வைத்து மீன் பிடித்துக் கொண்டுள்ளார்கள். பசிக்காக அடுத்தவனிடம் கைகட்டி வேலை பார்க்கும் நிலைமை வந்துவிட்டது, என் மீனவர் சமுதாயத்துக்கு. என் தலைமுறைக்குப் பிறகு, “உன் தகப்பனுக்கு என்ன தொழில்?” என்று கேட்டால், “கூலித் தொழில்” என்றே அடுத்த தலைமுறை சொல்லும்.

தலைமுறை தலைமுறையாக மீன் பிடி தொழில் செய்து வரும் என் குடும்பம் இப்பொழுது கூலித்தொழில் செய்து வருகின்றது. அந்த வேதனையே என்னை எழுச்சி ஊட்டி இதை எழுதவும் செய்தது.

படைப்பாளர்

அ. இனிதா பிரகாசி

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் தோழர் அ. இனிதா பிரகாசி. BA (Economics), DCA, (MBA) பயின்றுள்ளார். ஹெர் ஸ்டோரிஸ் மூலம் எழுதத் தொடங்கியிருக்கிறார்.

Exit mobile version