Site icon Her Stories

புது நீதிதேவதை அம்மணிக்குங்

அம்மணி வணக்கமுங், கண்ணக்கட்டிக்கிட்டு துரையம்மா இருந்தாக? இப்ப இல்லீங்களா? அப்பப்ப அவியட்ட வந்து பேசிட்டு போவேனுங்க. புரிஞ்ச மாதிரியே மூஞ்சிய வச்சிருப்பாங்கங். சரி போகட்டுமுங்… இப்பத்தான் நீங்க வந்திருக்கீங்க இல்லீங் மகராசியாட்டம். நான் பேசுறேனுங், நீங்க பேசுவீங்களான்னு தெரியலீங், எம்மூட்டு பாச உங்களுக்கு புரியுமான்னும் புரியலீங். தமிழ், தமிழுங்கோ நானு. தமிழ்ச்செல்வின்னு எங்கய்யன் வச்ச பேருங்கோ. 

ஏனுங்கம்மணி, ஒரு கைல தராசும் ஒரு கைல புஸ்தகமுமா எங்கூரு கடைக்காரம்மாவாட்ட நிக்கிறீங்க, ஆனா தலைல கிரீடமெல்லாம் வச்சு, ராணியம்மாவாட்ட சொலிக்கிறீங்க. வூட்ல நகைக்கடைங்களா? குலசாமி எந்தூருங்?

அம்மணி இந்த பெரிசு பெரிசா நகை போட்டிருக்கீங்கோ. அட்டிகை, கைவங்கி, கிரீடம், வளவி இதெல்லாம் அழுத்தலீங்களா? எனக்கு வேலை பாக்க இடைஞ்சலா இருக்குதுன்னுன்ங்க வளவிய கழட்டிப்போட்டு பலநாள் காணாம போயிருங். அப்புறம் ஒறம்பற விசேசத்துக்கு போக கவரிங் கடைல புதுசொன்னும், பக்கத்து வீட்டுல கடனொன்னும் வாங்கிப்போட்டு சமாளிக்கோணுங். உங்களுக்கு அப்பிடில்லாம் நடக்காதில்லீங். இவ்வளோ நகை போட்டிருக்கீங்க, பண்ணையத்துக்கு ஆள் வைக்காமயா இருப்பீங்க? 

ஏனுங்! அசலா தங்கம் தானுங்களே??

உங்க ஊர்ல சுதந்திரம் வந்திருச்சுங்களாங்? நீங்க போட்டிருக்கிறதத்தனையும் போட்டுட்டும் தனியா ரோட்ல நடந்து போயிட்டு வந்துருவீங்களா? இல்ல ஸ்கூட்டர்ல? கார்ல போவீங்களோங்?

எங்கூர்ல இன்னும் நாளாகுமாட்டு இருக்குங், உக்கூம்! நகைய அத்துட்டு போறதுக்கு ஒரு கூட்டமொன்னும் பொம்பளைய நாசம் பண்ற கூட்டமொன்னும் இருக்குதுங்கோ. 

நகைகூட போயிட்டு போகுதுங். நீங்க ஸ்லீவ்லெஸ் போடலீங், பாத்தேனுங்! பொறத்தால ச்சாக்கெட்டு இறக்கமுங்களா, அதானுங் லோ கட்டுங்களா? தலைவிரி கோலமா இருக்கீங்கல்லைங், பின்னாடி ச்சாக்கெட்டு டிசைனு தெரியலீங்! ஏனுங், பொம்பளையள எல்லாம் தலைய விரிச்சிப்போடக்கூடாதுன்னு ஒரு சாமியார் சொல்லி, போன்ல வந்துச்சில்லீங்? ஆனா நம்மூரு பொம்பளை சாமியெல்லாம் தலைவிரி கோலமா இருக்குறதுக்கு பின்னாடி ச்சாக்கெட்டு இறக்கம் எப்பிடி வைக்கன்னு குழப்பம் எதும் காரணமா இருக்குங்களா? அட, உங்களுக்கெப்பிடி தெரியுமுங்க, நானொரு கூறுகெட்டவோ, உங்ககிட்ட எதல்லாம் கேக்குறேன் பாருங்! 

எங்கூர்ல அபிநயான்னு ஒரு பொண்ணுங். படிச்சபுள்ள. நாந்தான் அதுக்கு துணிக்கு ஓரம் அடிச்சு குடுப்பேங்க. எனக்கு இந்த சின்ன சின்ன டெய்லரிங் வேலதான் மேல் சம்பாத்தியமுங்க. அந்த புள்ள சொல்லுச்சு, இண்டர்நெட்டுன்னு ஒண்ணு இருக்காமா! அதுல ஒருநா இந்தப்புள்ள உங்கள கணக்கா, துணி நகையெல்லாம் போட்டுட்டு ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்த கையோட,  ஒரு கைல புஸ்தகமும், இன்னொரு கைல இஞ்சினீரு புள்ளைங்க வச்சிருக்குமே அதும் வச்சு போட்டோ போட்டுச்சாமா. அதுக்கு பயலுக ஒரே வசவாமா!  என்னென்ன கேட்டீங்கன்னா தலயவே சுத்தீரும்ங்!

“வந்துட்டா ஆஃபாயிலு வளவிய மாட்டிக்கிட்டு, டிராஃப்டர தூக்கிக்கிட்டு வேலை செய்யிங்கடி, போஸ் மட்டும் குடுப்பாளுக”

“அப்பன் காசுல மினுக்குவாளுக, புருசனுக்கு ஆத்திர அவசரத்துக்கு  நகை குடுக்க மாட்டாளுக”

“புஸ்தகத்த வச்சிக்கிட்டு எங்க போறா குந்தாணி”

“இந்த அலங்காரத்துல வண்டி ஓட்டீராதடி பீப்பு”

“சேலை கவர்ச்சி நிரூபணமானது கள்ளி

சேலையில்லா படமிருக்கு வைங்க புள்ளி”

“தலைய விரிச்சி போட்டிருக்கா மயிரா விளங்கும்” 

“காதுவளக்கவா இம்மாம் பெரிய கம்மலு”

“இடுப்பு ரெம்ப குறுகலா இருக்கே 

எதுனா சொல்லுடா அனிமலு!”

என்னதான் நேர்ல இல்லன்னாலும் இப்பிடியெல்லாமா பேசுவாங்க? 

கேட்டுட்டு எனக்கே பகீர்னாயிருச்சுங்க. நேர்ல அப்ப இதெல்லாம் மறைச்சிட்டு பேசிக்கிருவாங்களாங்? இதெல்லாம் ஏதோ ஃபாரின்காரங்களா இருக்குமில்லீங்களா? நம்ம ஊர்லதான் பொம்பளையள சாமியா கும்பிடுவாங்கல்லீங்! இப்பிடில்லாம் உங்கள யாரும் சொல்ல மாட்டாங்கல்லைங்?

இவியதான் கல்யாணம் பண்ணாலே புருசன்கூட பொஞ்சாதி இருந்தாகோணும்னு சொல்ற கோஷ்டியாமா! எங்க சின்னாத்தா கேக்கோணும், வெளக்கமாத்தாலேயே ஆஞ்சி போடும் இவனுகள!

கண்ணாலம் ஆச்சுங்களாங்?

கன்செண்டானு கேட்டாங்களாங்?

வேணாம்னு சொல்லி கைய வச்சா

மெரிட்டல் ரேப்புங்களாங்?

அய்யோ, காட்டுக்கு நேரமாச்சு போயிட்டு நாளைக்கு வரேங்க. 

—————————————————-

ஏனுங்க நீதியம்மா, நாந்தானுங்க தமிழ்ச்செல்வி. நேத்து பேசுனமேங்? 

என்னய மன்னிச்சிருங்க, நான்பாட்டுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் நீங்க என்னய மாதிரி ஒரு பொம்பளன்னு நெனச்சி பேசிப்பொட்டேங்க. அபிநயா சொல்லுச்சு, தமிழக்கா துரையம்மா மாதிரி நெனைக்காத, அவங்க பெரிய இடம்… நீ பாட்டுக்கு வாயக்கொடுத்து வைக்காதன்னு. நான் ஒரு கூறு கெட்டவோங்! மன்னிச்சிருங்!

துரையம்மாவுக்கு என்ன அர்த்தம், உங்களுக்கு என்ன அர்த்தமுன்னுல்லாம் அபி சொல்லிச்சுங். ஏனுங், துரையம்மா பாரபட்சமில்லாம ஆலோசனை பண்ணி, ஆராருந்தாலும் தப்புன்னா தண்டனை குடுப்பேன்னு சொல்லத்தான் கண்ண மூடி, ஒரு கைல தராசும் மறுகைல நீட்டமா கத்தியும் வச்சிருந்தாங்களாமா?! துரையம்மான்றதால அவங்கள அனுப்பிச்சிட்டாங்களோங். சர்த்தானுங்! அவியவியளுக்கு அவியவிய தானுங் நாட்டாமை பண்ணோனும்! 

நீங்க பாரபட்சமில்லாம கண்ண நல்லா திறந்து பாத்து ஆலோசனை பண்ணுவீங்கன்னு சொல்றாங்கங். அதும் சர்த்தானுங். ஆனா தண்டனை குடுக்க கத்தி ஒண்ணும் வச்சிக்கோங்கோ, இல்லீன்னா தராசுக்கு மதிப்பில்லீங்கம்மிணி! கை பத்தலன்னா பின்னால இன்னும் ரெண்டு கை வச்சிக்கலாமுல்லோ? அதொண்ணும் புதுசில்லீங்களே!

ஆனா அம்மணி, நீங்களும் என்னாட்டமே எல்லார்கிட்டயும் வெள்ளந்தியா இருக்கிற ஆள்னா, பொஸ்தகத்து பேர மாத்திப்புடுவானுங்கோ, அது மட்டும் சூதானாமா இருக்கோணும்ங்க நீங்க. நீதின்னு பேர் வச்சா மட்டும் அதுல எல்லாருக்கும் நீதி இருக்குறதில்லீங்கன்னு ஈரோட்டுக்காரரு ஒருத்தர் சொன்னாருன்னு எங்கய்யன் சொல்லுவாருங்கோ. 

நீங்க கைல இப்போ வச்சிருக்கிற அந்த அரசியல் அமைப்பு சட்டம் பொஸ்தகத்துல எல்லாரும் சமதையா இருக்கச் சொல்லிருக்குதாமே. உங்களுக்கு சேலையும், நகையும் இருக்கனும்னு யாரு போட்டு விட்டாங்களோ, அவங்க உங்கள  சமதையா இருக்க விடுவாங்களான்னு யோசனை வந்து போகுதுங்க. 

உசரம் கூடுன கோவில கட்டி சனங்களுக்கும் சாமிக்கும் பிரிவினை பண்ணானுங்க.

விலை கூடுன நகைய மாட்டி அம்மன்களையும், பெண்களையும் வேற செஞ்சானுங்க 

பளபளப்பு கூடுன மாளிகைங்கள கட்டி சனங்க வேற ராசா வேறன்னு பிரிச்சாங்க 

இப்பிடி கவுரதைக்கு பண்றது எல்லாமே சமதைக்கு எதிரின்னு – எங்கய்யன் சொல்லி கேட்டிருக்கேங்க.

நகை, நட்டு பட்டுச்சேலை எல்லாம் கவுரதைக்குத்தானுங்களேங்?

அப்போ துரையம்மா இருந்தப்போ கூட பிரிவினை தெரியலீங், ஆனா இப்போ இந்த உருவத்துல ஒட்டுதல் வர்லீங். பாமர சனத்துக்காக நீங்க இருக்கோனும்னா, உங்களுக்கு சேலை கட்டி, நகைநட்டு போட்டு விட்ட மகராசங்ககிட்ட சூதானமா இருந்துக்கோங்க. 

தெரியாம நேத்து மேரிட்டல் ரேப்பு பத்தியெல்லாம் கேட்டு மனச புண்படுத்திட்டேனாக்குங்? நெசமாலயே உங்க கிட்ட கேட்டிருந்தா இந்த சேலை, இந்த நகைக்கே சரின்னு சொல்லிருக்கமாட்டீங்கல்லீங்? 

ஒரே ஒரு சந்தேகந்தான் எப்பயுமே ஓடிட்டே இருக்குங். பொம்பளையாவே இதெல்லாம் பண்றமாறி, வேஷங்கட்டித்தான் இதல்லாம் பண்ணோனும்னு என்ன இருக்குங்? ஆம்பளையப்போட்டுக்கூட பண்ணிக்கலாமில்லீங். வடக்கால சாமின்னு கும்பிடுவாங்கள்லீங் திருநர், அவங்களாக்கூட  இருக்கக்கூடாதா இந்த நீதி தேவதை?  எதேதோ மாறிருச்சிங்கோ, இதுக்கென்னங் மாறுனா?

நான் எப்பிடி இருக்கோணும்னு எல்லாரும் முடிவு பண்ணாங். நீங்க யாருன்னே அவங்கதான் முடிவு பண்றாங்க. 

சரிங்க வாங், என் பக்கத்துல உட்காருங். கால காலமா பொழப்பு ஓட்ட சொல்ற ஒரே வார்த்தை தாங்க இப்பயும் சொல்லப்போறேன்.

“பாத்துக்கலாங்”

…..

“இல்லீங் இல்லீங், நாம நம்ம மேல துப்பிக்கிறதில்லீங், சும்மா வெறுமனே பாத்துக்கலாங்க தானுங்க…”

படைப்பாளர்

காளி

இதே பெயரில் Twitter-ல் @The_69_Percent என்று இயங்கி வருகிறார். முச்சந்துமன்றம் என்ற பெயரில் உள்ள புத்தக வாசிப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.

Exit mobile version