Site icon Her Stories

ஒரு சின்ன கொசுவா நம்மைச் சிறைப்பிடிப்பது?

                                                                              

அது ஒரு மார்ச் மாதம். விடிகாலை ஐந்து மணியிருக்கும். லேசாகக் குளிருவது போலிருக்கவே நிலைமேடை மின்விசிறியை நிறுத்தினேன்.  உடனே, ’கொய்ங்’ ’கொய்ங்’ என்று சத்தமிட்டுக் கொண்டு கொசுக்கள் முகத்தை அப்ப ஆரம்பித்துவிட்டன.  ஒவ்வொரு கொசுவும் ராட்ச அளவில் இருந்தன.  ரத்தக்காட்டேரிபோல அங்கும் இங்கும் பறந்து என்னை ட்ரோன்போல பல திசைகளிலிருந்து தாக்கிக்கொண்டிருந்தன. நொந்துகொண்டே மீண்டும் மின்விசிறியை இயக்கினேன்.

                எட்டு மணிக்குக் அலைபேசி அழைத்தது. ஓர் அவசர கூடுகைக்கு அனைத்து ஆசிரியர்களும் வருமாறு கல்லூரி முதல்வர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். சிரியான நேரத்திற்கு அவர் எந்த நிகழ்விற்கும் வருவதேயில்லை. ஆனால், நாங்கள் அவர் வருவதற்கு முன்னதாக ஆஜராகியிருக்க வேண்டும் என்பது எங்கள் கல்லூரியில் எழுதப்படாத விதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எதற்கு வம்பு என்று நாங்கள் முன்னமேயே போய் ஒருவருக்கு இன்னொருவர் குசலம் விசாரித்துக் கொண்டிருப்பது வழக்கம்.  ஏனோ,  ஆசிரியர்களாக அவரது தலைமையில் இலங்கைக்குச் சுற்றுலா போய் வந்ததிலிருந்து முதல்வர் அம்மா தன்னை ஓர் அதிபராகவே பார்க்கிறார்.  இலங்கையில் கல்லூரி முதல்வர்களை ‘அதிபர்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனால், இங்கு அப்படி அழைத்துக்கொண்டால் சிக்கலாகிவிடும் என்கிற அளவிற்கு அரசியல் பொதுப்புத்தி அவருக்கு இருப்பது பாராட்டப்பட வேண்டியதே!

                நேரம் கடந்து கொண்டே இருந்தது. இரவு முழுவதும் கொசுக்களோடு போராடியதில் சரியான உறக்கம் இல்லை.  அலைபேசியில் இருபது நிமிடத்திற்கு டைமர் போட்டு, தூங்கி எழுந்திருக்க முடிவு செய்தேன்.  கிராமங்களில் சூரியன் உதிக்கும் முன்னே எழுந்திருப்பவர்கள்தான் எதார்த்தம் என்றால், எனக்கு அலைபேசியில் அலாரம் அடித்தால் மட்டுமே எழுந்திருக்க முடியும் என்கிற நிலை.  மூன்று அலாரங்களை அரை மணி நேர இடைவெளியில் வைத்து ‘அது அடிக்கும் பட்சத்தில்’ மூன்றாவது அலாரத்தில் நான் கண் முழித்து எழுந்துவிடுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.  எழுந்தவுடன் முதல் வேலை  கொசு அடிக்கும் மின்சார மட்டையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் செல்வதுதான். இரவு முழுவதும் என் ரத்தத்தை சிரிஞ்சு போட்டு உறுஞ்சிய கொசுக்களை மட்டையால் அடித்தால் பட்டாசு வெடிப்பதுபோல படபடவென சத்தம் வரும். ஒருமுறை நான் இப்படிச் செய்வதைப் பார்த்துவிட்டு என் 18 வயது மகன் என்னை ’சாடிஸ்ட்’ என்று சொன்ன பிறகும் எனக்கு இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை.  முதல் மாடியிலுள்ள அறையில் படுக்கும் அவனை கொசுக்கள் மாடி வரை பறந்து சென்று பதம் பார்ப்பதில்லை.  சுலபமாக படியேற முடியாத என்னைப் போன்ற தரைவாசிகளையே கொசுக்கள் விரும்புகின்றன.

                கல்லூரிக்கு முன்னே ஓடுகின்ற, இல்லை, ஓடாமல் தேங்கியிருக்கிற ஓடைதான் கொசுக்களின் சரணாலயம். விதவிதமான கொசுக்கள் இந்த ஓடையில் உற்பத்தியாகின்றன. வரிக்குதிரை கொசு, வரியில்லாத கொசு, மாட்டுக்கொசு என்று பல பல ரகங்கள். அதிலும் ஒரு குறிப்பிட்ட வகை இருக்கிறது.  இந்தக் கொசுவினால் கடிபட்டவர் கடிபட்ட அந்த இடத்தை வங்கு சொறிவதுபோலச் சொறிந்து, சொறிந்து அந்த இடத்தில் புண்ணே வந்துவிடும்.  கடித்தாலோ தேள் கொட்டின மாதிரி கடுக்கும்.

     மாலையில் தொடங்கும் கொசுக்களின் லீலைகள், இரவில் ருத்ரதாண்டவத்தின் உச்சத்தை அடைந்து காலையில் அடங்கிவிடுகின்றன.    ஆனால், ஒன்றை மட்டும் நான் இங்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். இந்தக் கொசுக்கள் எங்கள் கல்லூரிக்கென்று ஓர் அடையாளத்தைக் கொடுத்திருக்கின்றன. கல்லூரியையும் கொசுக்களையும் இணைத்துப் பல உவமைகள், உவமானங்கள் இன்னாள், முன்னாள் மாணவர்களிடையே புழக்கத்தில் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக் கொசுக்கள்கூட முதல்வரின் அனுமதியைப் பெற்ற பிறகே எவரையும் கடிக்கச் செல்லும் என்பது முதல்வரின் ஆற்றலை வெளிப்படுத்தும்! ஒருநாள் இது குறித்து அவரிடமே கேட்டுவிடலாம் என்கிற அசாத்திய துணிச்சல் வந்தது.

நான்: மேடம், இந்த ஓடையைச் சுத்தம் செய்தால் கொசுத் தொல்லை குறையுமே.

முதல்வர்:  என்னது? ஓடைன்னா சொன்ன? உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். இது சங்க காலத்து நதி. உனக்கென்ன தெரியும்? நான் இந்தக் கல்லூரியில் பல நிலைகளில், பல பொறுப்புகளில் பணி புரிந்திருக்கிறேன். ஒருவர்கூட இந்த நதியை ’ஓடை’ என்று குறிப்பிட்டதில்லை.

நான்: ஒரு காலத்தில் நதியாக இருந்ததென்னவோ உண்மைதான். இன்றைக்கு நெகிழிப் பைகளும், கழிவுகளும் குப்பையும் கூளமுமாக இருக்கிறதே! தண்ணீர் தேங்கியிருந்தால் கொசுவின் எண்ணிக்கை பெருகாமல் எப்படி, மேடம்?

மேடம்: நீ நினைக்கிற மாதிரியெல்லாம் செயல்பட முடியாது. நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. உனக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தால் நீயே இறங்கிச் சுத்தம் பண்ணு – யாரு வேண்டாம் என்கிறார்கள்?

நான்: இந்தக் கொசு தொல்லையைப் போக்க வேற வழியேயில்லையா, மேடம்? கடிக்கிற கொசு நம்ம ரத்தத்திற்குப் பதிலாக கொழுப்ப உறிஞ்சியிருந்தா இந்நேரம் நான் ‘ஸ்லிம் பியுடி’ ஆகியிருப்பேன், மேடம்!

மேடம்: ம்ம்ம்… பழைய ஜோக்! எய்ட்ஸ் நோயைப் பரப்பவில்லையேன்னு சந்தோஷப்படு, ஆமா, ஆறு மணிக்கு மேல கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு வீட்டிற்குள் இருந்தால் கொசு ஏன் உள்ளே வரப்போகிறது?

நான்: எப்படியாவது கொசு வீட்டிற்குள் வந்துவிடுகிறது, மேடம். கொசுவே சின்ன சைஸ்லதானிருக்கிறது. ஆனால், அதுக்கு இருக்கிற மூளை ரொம்ப ஷார்ப்பாக இருக்கிறது!

மேடம்:    நமக்கு தலைக்குமேல பல பிரச்னைகள் இருக்கிறது.  அதுவெல்லாம் ஆண்களுக்குப் புரியவா போகுது.  லாவோ ட்சு என்கிற சீன ஞானி சொன்னதுதான் பட்டென்று நினைவுக்கு வருகிறது. ஆண்களுக்கு அவர்களுடைய முதலுறுப்பில் கொசு கடிக்கும்போதுதான் பிரச்னையின் வலியென்ன என்பது அவர்களுக்குப் புரியும். அதுவரை நாம் எந்த விவாதத்திற்குள்ளும் போக வேண்டாம்.

நான்: சரி, மேடம்!

சுருக்கென்று கன்னத்தில் ஊசி போட்டது போன்ற உணர்வு, வலது கையால் ஓங்கி என்னை நானே கன்னத்தில் அடித்துக்கொண்டேன்.  கையில் ரத்தம். அலாரமும் அடிக்கவே, கனவுதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு அதிபரைக் காணக் கிளம்பினேன்.  

படைப்பாளர்

ஜா. கிறிஸ்டி பெமிலா

ஜா. கிறிஸ்டி பெமிலா, B.E., B.D., M.Th., MA., Ph.D., காரைக்காலில் பிறந்தவர்.  பொறியியல் துறையில் அடிப்படைத் தகுதி பெற்று ஆசிரியர் பணியாற்றிய அனுபவம் உண்டு, அத்துறையில் நாட்டம் குறைந்து சமயத்தறையில் ஆர்வம் ஏற்படவே மதுரையிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கிறிஸ்தவ இறையியலில் இளம்தேவியல் பட்டத்தையும், இஸ்லாமிய கல்வியில் முதுகலைப் பட்டத்தை ஹைதராபாதிலும் பெற்றார். பாரசீக மொழியில் முனைவர் பட்டத்தை உத்திர பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் 2023-ம் ஆண்டு பெற்றார். தற்போது தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் சமயத் துறையில் பேராசிரியையாகப் பணிபரிந்து வருகிறார்.

Exit mobile version