Site icon Her Stories

மீசை

நம் சமூகத்தில் மூக்கின் கீழ் வளரும் ரோமத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம். ஆனால் அந்த மீசைக்கு அத்தனை மதிப்பளிப்பது அவசியமா என சிந்தித்தால், ‘இல்லை’ என்பதே பதிலாக வரும்.

காரணம் மீசை என்பது வளரிளம் பருவத்தில் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் தூண்டப்பட்டு ஆண்களின் அக்குள், மார்பு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் வளரும் ரோமம் போன்று முகத்தில் வளரும் ரோமம். இது ஒரு சாதாரண பருவ வயது மாற்றம், அவ்வளவுதான். 

மீசைக்கு நம் சமூகத்தில் இப்போது இத்தனை மதிப்பு இருந்தாலும், தமிழர்களின் பண்டைய பண்பட்ட நாகரீகத்தை பதிவு செய்துள்ள சங்க இலக்கியங்களில் மீசை எனும் சொல் காணக் கிடைக்கவில்லை. தமிழ்ச் சொற்களின் வேர், வரலாறு, இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, நாட்டுப்புறச் சொற்கள், திராவிட மொழிகள், உலக மொழிகள் ஆகியவற்றை விளக்கும் நூலான ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி’யில் மேலே/மேலிடம் என பொருள்படும் ‘மிசை’ என்கிற சொல்லில் இருந்துதான் ‘மீசை’ எனும் சொல் வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், கம்பராமாயணத்தில் (மாரீசன் படலம் 49) ‘துடித்த தொடர்மீசைகள் சுறுக்கொள’ எனும் வரியும் வருகிறது. மீசை எனும் சொல் திராவிட மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முறையே மீஷா, மீசெ, மீசமு என்று சொல்லப்படுகிறது.

நம் சமூகத்தில் மீசையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள கற்பிதங்கள் ஏராளம், உதாரணமாக நாம் அடிக்கடி திரைப்படங்களிலும் சாதாரண பேச்சு வழக்கிலும் கேட்கும், “நீ மீசை வெச்ச ஆம்பளையா இருந்தா…” என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். இதற்குப் பொருள், ‘நீ தைரியமான ஆணாக இருந்தால்’ என்பதுதான். முதலில் தைரியமாக இருப்பது ஆண்களுக்கு மட்டுமே உரிய பண்பு என நினைப்பதே அபத்தம். அப்படியிருக்க தைரியமாக இருப்பதற்கும் மீசைக்கும் சம்பந்தம் இருப்பதாக நினைத்து, காலம் காலமாக இந்த வாக்கியத்தை பயன்படுத்துவது, எவ்வளவு பெரிய அபத்தம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

பெண்களும்  தைரியமாக இருக்கிறார்கள், ஆனால் பெண்களுக்கு மீசை இல்லை. சில விதிவிலக்குகள் உண்டு (கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஷைஜா என்ற பெண் அடர்த்தியான முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது).

தைரியமான ஆண்கள் சிலருக்கும் மீசை இல்லை என்பதை வரலாறு நெடுக நம்மால் பார்க்க முடிகிறது. அப்படியானால் தைரியமாக இருப்பதற்கும் மீசைக்கும் சம்பந்தம் இல்லை, பிறகு ஏன் இந்த ஒப்பீடு?

இதற்கான பதிலை தேடிச் சென்றால், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் ஹங்கேரி நாட்டின் குதிரைப் படை வீரர்கள், மீசை வைத்துக் கொள்வதை பெருமிதமாகக் கருதியுள்ளனர். இதற்குக் காரணம் போரின்போது எதிரிப் படையினர் மீசையுடன் இருக்கும் இவர்களைக் கண்டு அஞ்சுவதே என சொல்லப்பட்டது, இதே போல ஐரோப்பா மற்றும் பிரித்தானியா நாட்டு குதிரைப் படை வீரர்களும் மீசை வைப்பதை பெருமையாக நினைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அக்காலத்தில் மீசை என்பது ஒரு படை வீரனுக்கும் அந்நாட்டின் சாதாரண குடிமகனுக்கும் இடையேயான வேறுபாடாகக் கருதப்பட்டது. 

நம் நாட்டில் எடுத்துப் பார்த்தாலும், அரசர்கள், போர் வீரர்கள் யாராயினும் அவர்களின் மீசைதான் முதலில் நம் நினைவுக்கு வருகிறது. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு வீரபாண்டிய கட்டபொம்மன். ‘கட்டபொம்மன்’ எனச் சொல்லும்போதே அவரின் மீசைதான் நம் நினைவுக்கு வரும். இதுபோல ஊமைத்துரை, ஒண்டிவீரன், கருப்பசேர்வை, பூலித்தேவன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை என இன்னும் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்களின் முகங்களை நினைவு கூரும்போது, முதலில் நினைவுக்கு வருவது அவர்களின் மீசை. புகைப்படத் தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில், சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்டு தற்போது காலம் தாண்டி நிற்கும் இந்த வீரர்களின் ஓவியங்கள் அனைத்தும், ‘வீரம்’ என்பதை மீசையுடன் தொடர்புபடுத்திய, சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முந்தைய தலைமுறை ஓவியர்கள் வரைந்தவையே.

ராஜராஜன் ஓவியம், மீசை தாடியுடன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குள் வரையப்பட்ட சோழப் பேரரசர் ராஜராஜனின் ஓவியத்தில்கூட அவருக்கு மீசை, தாடி, கொண்டை காணப்படுகிறது. ராசேந்திர சோழன் வடித்த தந்தை ராஜராஜனின் சிற்பங்கள்கூட மீசை தாடியுடன் காட்சி தருகின்றன. ஆனால் மீசையை ‘ஆண்மை’, ‘வீரம்’ போன்ற கருத்தாக்கங்களுடன் அப்போது யாரும் பொருத்திப் பார்க்கவில்லை. இந்த நடைமுறை விஜயநகர ஆட்சியான நாயக்கர் காலத்தில் மாறியது எனலாம். பிற்கால நாயக்கர் கால சிற்பங்கள், ஓவியங்கள் – அவற்றில் மன்னர்கள், வீரர்களை மீசை உடையவர்களாகக் காட்டியுள்ளனர். பிற்கால தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஓவியங்கள், சிவகங்கை, ராமநாதபுரம் அரசர்களின் ஓவியங்கள் என 17ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வீரர்கள், அரசர்கள் பெரும் மீசையுடன் காட்டப்பட்டனர். அவர்கள் அவ்வாறு இருந்திருக்கவேண்டும், கலைஞர்களும் தங்கள் படைப்புகளில் அவ்வாறு அவர்களைக் காட்டியிருக்கவேண்டும். ஏறத்தாழ ஐரோப்பாவிலும், இங்கும் ஒரே காலகட்டத்தில்தான் வீரம், ஆண்மை என்பதை எல்லாம் மீசையுடன் பொருத்திப் பார்க்கும் பாங்கு வந்தது எனலாம்.

இது வெறும் படைவீரர்களுக்கும் அரசர்களுக்கும் போராளிகளுக்கும் மட்டும்தான் பொருந்துகிறதா எனப் பார்த்தால் இல்லை. பாரதியார் பல கவிகள் பாடியிருந்தாலும் முதலில் நம் நினைவிற்கு வருவது அவரின் மீசை. அவ்வளவு ஏன்? உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர்கூட பெரிய மீசையுடன் இருப்பதாகத்தான் பிற்காலத்தில் வரையப்பட்டுள்ளது. இது போல இன்னும் பல எடுத்துக்காட்டுகள் நம் கண் முன்னே இருக்கின்றன. காலப் போக்கில் இவர்களின் வீரத்துக்கும் ஆளுமைக்கும் மீசைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டதுதான் துரதிர்ஷடவசமானது.

சரி, மீசை வைத்திருந்தவர்கள் மட்டும்தான் வரலாற்று நாயகர்களாக இருந்தார்களா எனப் பார்த்தால் அப்படியும் இல்லை. சுபாஷ் சந்திர போஸ், திருப்பூர் குமரன் போன்ற பல வீரர்களும் மீசை இல்லாதவர்கள்தான். இந்த காலகட்டத்தில் புகைப்படக் கலை வளர்ந்ததால், ‘உள்ளதை உள்ளபடி காட்டும்’ நிலையும் ஏற்பட்டது, கலைஞர்களின் கற்பனை, கற்பிதம் எடுபடவில்லை.

அதே போல மீசை இல்லாத பெண்கள் பலர் போர்க்களம் சென்று வீரமாக போர் புரிந்துள்ளனர். சான்றாக வீரமங்கை வேலுநாச்சியார், எதிரிகளை உலக்கையால் அடித்து அழித்த ‘ஒனெக்’ ஒபாவ்வா, கிட்டூர் ராணி செல்லம்மா, கேலாடி சென்னம்மா, துர்காவதி, ஜான்சிராணி என வரலாறு நெடுக இன்னும் எத்தனையோ பெண் வீராங்கனைகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. இவர்கள் பெண்கள்; அதிலும் மீசையில்லாத பெண்கள், ஆனாலும் வரலாறு போற்றும் வீரம் இவர்களில் இருந்தது. அப்படியானால் வீரத்துக்கும் பாலினதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; குறிப்பாக வீரத்துக்கும் மீசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை  என்பது தெளிவாகிறது. 

ஆனாலும் ஏன் மீசை வீரத்தின் அடையாளமாகவும் உயரிய விஷயமாகவும் பார்க்கப்படுகிறது? உண்மையில் அது தைரியத்தின் அடையாளமாக பார்க்கப்படுவதால் சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தைப் பெற்றுள்ளதா?  மீசைக்கும் சமூக அந்தஸ்திற்குமான தொடர்பிற்கு காரணம் என்ன?

1800 – களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஈழவர், நாடார், சாம்பவர் போன்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்கள் மீசை வைத்துக் கொள்ள வரி விதிக்கப்பட்டிருந்தது.

இது 1800 – களில் தானே நடந்தது? இப்போது அப்படி எதுவும் இல்லையே என ஆசுவாசப்பட இயலாது, காரணம் 2017ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டத்திலுள்ள லிம்போதரா கிராமத்தில், மீசை வைத்திருந்ததற்காக ராஜ்புத் ஜாதியைச் சேர்ந்த ஒருவரால் தலித் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, தாக்குதலுக்கு உள்ளான இளைஞரின் சொந்தக்காரர் ஒருவரும் இதே போல தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்த கதை 2017இல்தான் கடைசியாக நடந்ததா எனக் கேட்டால், அதுவும் இல்லை. ஜெய்ப்பூரிலிருந்து 300 கிமீ மேற்கே, ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தின் பர்வா கிராமத்தை சேர்ந்த ஜிதேந்திர மேக்வால் என்ற தலித் இளைஞர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்தவர். சூரஜ் சிங், கமலேஷ் சிங் மற்றும் சந்தன் சிங் ஆகிய சாதி இந்துக்களால் இவர் 2022 மார்ச் மாதம் 15ஆம் தேதி அன்று சரமாரியாகக் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போனார். கொலைக்கான காரணமாக இம்மூவரும் சொன்னது ஜிதேந்திர மேக்வால்  மீசை வைத்திருந்தார் என்பதுதான். 

இதுபோல இன்னும் எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கு மீசை என்பது சாதி ஆதிக்கம் மற்றும் சாதி கௌரவம் ஆகியவைகளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது என்பதை மேல்கண்ட சில நிகழ்வுகளில் இருந்து நம்மால் புரிந்து கொள்ளமுடியும், அதாவது மீசை மேட்டிமைத்தனம் மற்றும் ஆதிக்கத்தின் குறியீடாக இருக்கிறது.

வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மீசை வைத்திருந்ததும், இன்று சமூக சாதிய அடுக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீசை வைக்கக் கூடாது என சொல்வதற்கும் காரணம், தெரிந்தோ தெரியாமலோ, அதிகாரம் மிக்கவர்கள் மட்டுமே மீசை வைக்க தகுதியுடையவர்கள் எனும் கற்பிதம் மட்டுமே. 

மீசை சாதிய ஆதிக்கத்தின் அடையாளம் மட்டுமா எனக் கேட்டால் இல்லை. “மீச வெச்ச ஆம்பள முன்னாடி பேசாத” என்பது போன்ற சொல்லாடல்களை கடந்து வராத பெண்கள் சொற்பமே, மீசை என்பது ஆண்மையின் அடையாளமாகவும் மேன்மையும் அடையாளமாகவும் பார்க்கப்படுவது தான் இதற்கு காரணம்.  முதலில் ஆண்மை என்றால் என்ன? என்ற கேள்வியே விடை தெரியாத பல நூற்றாண்டு கேள்வி, அப்படியிருக்க ஆண்மையின் அடையாளமாக மீசை பார்க்கப்படுவது, வேடிக்கையான ஒன்றுதான்.

சமூகப் பார்வையைச் சொல்ல இந்தப் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது*

மீசை வளராமல் இருப்பது சிலருக்கு இயற்கையான ஒன்று. ஆனால் மீசை ஆண்மையின் அடையாளமாகவும் மேன்மையின் அடையாளம் எனவும் கற்பிக்கப்பட்டுள்ளதால், மீசை வளராத ஆண்களும் வளரிளம் பருவத்தில் உள்ள ஆண்களும் ஒரு வித தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவதைப் பார்க்க முடிகிறது. இந்த சிந்தனைகளுக்கு எண்ணெய் ஊற்றுவது போல பல சமூக வலைதளங்களிலும், ‘மீசை வளர வேண்டுமா இதைச் செய்யுங்கள்’ என பல மருத்துவ குறிப்புகளும் அள்ளி தெளிக்கப் படுகின்றன. இதனாலேயே மீசை இல்லாதது ஏதோ உடல் குறைபாடுபோல நினைக்கின்றனர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒரு ஆணின் முகத்தில் மீசை வளருவதில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது தவிர, மீசை மயிர்க்கால்களின் தன்மை, நாம் உட்கொள்ளும் உணவு என பல காரணிகளும் இதில் பங்கு கொள்கிறது. எனவே இந்த அனைத்து காரணிகளும் சரியாக உள்ள நிலையிலும் சிலருக்கு மீசை வளராமல் போனால் அது குறித்து கவலை கொள்ள தேவையில்லை என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. உடல் நலம் சார்ந்து சிந்திக்க வேண்டிய இடத்தில் தேவையற்ற சமூக கற்பிதங்கள் மூலம், வெறும் வெளித் தோற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் அவலம் நடக்கிறது. 

மீசை இல்லையென்றால் அவமானப்படுத்தப்படும் ஆண்கள் இருக்கும் இந்த சமூகத்தில், ஒரு பெண்ணுக்கு மீசை இருந்தால் அவளும் அதே அளவு அவமானத்திற்கும், கேலி கிண்டலுக்கும் உள்ளாகிறாள் என்பதை மறுக்க முடியாது. PCOD/PCOS (பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ்/ பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) உள்ள பெண்களுக்கும் ஹார்மோன் பிரச்னைகள் உள்ள பெண்களுக்கும் முகத்தில் முடி வளருவது ஒரு அறிகுறி, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது சரியாகும். ஆனால் சமூகத்தில் அப்பெண்கள் சந்திக்கும் ஏளனங்கள், அவர்களை அவர்களது உடல்நிலை பற்றி கவலைப்பட விடாமல், வெளித்தோற்றத்தை சரி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வைக்கிறது. இப்படி மீசை என்பது ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு கோணங்களில் துரத்தும் சமூக மதிப்பீட்டுக் காரணியாக உள்ளது. 

ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டுமெனில் “உனக்கெல்லாம் எதுக்கு மீச?” என சொல்வதை நாம் கேட்டிருப்போம், அல்லது “மீசைய மழிச்சிட்டு போ” என வசை பாடுவதை கேட்டிருப்போம், அதாவது ஒரு ஆணை இழிவு செய்ய நினைப்பவர்கள் அந்த ஆணின் மீசையைக் குறிவைத்துப் பேசுவதுகூட,  மீசை ஆணின் அடையாளம், அது ஆண்மையின் சின்னம் என சமூகத்தில் நிலவும் கற்பிதமே ஆகும். 

இது போன்ற கற்பிதங்கள் எந்த வித அடிப்படையான புரிதலும் இல்லாமல் ஒட்டுமொத்த ஆதிக்கத்தின் அடையாளமாக மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளன. 

மீசை என்பது வெறும் மீசை மட்டுமல்ல, அது ஆதிக்கத்தின் ஒரு குறியீடு, அந்த ஆதிக்க குறியீடுகள் வரலாறு நெடுக பதித்த சுவடுகள் அழியாமல் இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சிதான் இன்றுவரை நம் சமூகத்திலும் திரைப்படங்களிலும் மீசையை முன்னிறுத்தி பேசப்படும்/எழுதப்படும் வசனங்கள். இவை மாற வேண்டுமெனில் முதலில் மீசை என்பது மனிதனின் உடலில் வளரும் ரோமம்தான் என்பதையும், மீசைக்கும் ஒருவருடைய சுயமதிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் உணருவது மட்டுமே.

இனி வரும் தலைமுறையினராவது இது போன்ற வெற்று பிம்பங்களில் சிக்காமல் இருப்பதற்கு நம்மால் செய்ய முடிவது ‘மீசை வெறும் மயிர்தான்’ என உரக்கச் சொல்வதே…

படைப்பாளர்

நாகஜோதி

Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். இறை மறுப்பாளர். பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.

Exit mobile version