Site icon Her Stories

ஃபிர்னியின் இனிமை போல என் மோராத்து வாப்புமா!

INDIA. House front in the Muslim part of town. Nagapattinam. Tamil Nadu state. South India.

ஒரு பள்ளிவாசலும் அதனோடு சேர்ந்த தெருவில்/தெருக்களில் வாழும் மக்களுமாக அமைவதுதான் ஒரு ஜமாத். முஹல்லா என்றும் சொல்வதுண்டு. எங்கள் ஊர்ப் பகுதிகளில் ஜமாத் என்ற சொல்லே வழங்கி வருகிறது. ஏரலில் நான்கு பள்ளிவாசல்கள் அவற்றோடு சேர்ந்த ஏழு தெருக்கள் என்று நான்கு ஜமாத்துகள் உள்ளன. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு மட்டும் வாரத்துக்கு ஒரு பள்ளி என முறை வைத்து ஏழு தெருவினரும் பொதுவாக ஒரே பள்ளிவாசலில் கூடுவார்கள். மற்ற எல்லா நேரங்களிலும்  அவரவர் தெருவின் பள்ளிவாசலிலேயே ஆண்கள் தொழுகைக்குச் சென்று கொள்வார்கள். முப்பது நோன்பின் இரவினில் தராவீஹ் தொழுகைக்குச் செல்வதும் அவ்வாறே. 

பெண்கள் பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவது இல்லை. முப்பது இரவுகள் தராவீஹ் தொழுகைக்கும் நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாள் தொழுகைகளுக்கும் மட்டுமே பெண்கள் பள்ளிக்குச் செல்வார்கள் (இப்போது சில ஊர்களில் பெண்களுக்கெனத் தனி பள்ளிவாசல்கள் உள்ளன. அவர்கள் ஐவேளைத் தொழுகைக்கும் அங்கு சென்று தொழலாம்). அதனால் அவரவர் ம்மா, லாத்தா, மூமா, வாப்புமா எனக் குடும்பத்தோடு தொழுகைக்குச் சென்றது சிறுமிகளான எங்களுக்கு ஒரே கொண்டாட்டமான பொழுதுகளாயிருந்தவை. 

இந்த இரவுத் தொழுகைக்கு வருபவர்களுக்குத் தொழுது முடித்ததும் சுக்குக் காப்பி வழங்கப்படும்.  அப்படி வழங்க தெருவிலுள்ள வீடுகளில், ‘இன்று இந்த வீட்டு முறை’ எனப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இரவானதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக, எண்ணிக்கைக்கு ஏற்ப, பெரிய கேத்தல்கள்(kettles) பள்ளிவாசலிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும். கருப்பட்டி சுக்கு மிளகு கொத்தமல்லிப்பொடி சேர்த்த மணமான சுக்குக்காப்பி நிறைத்த கேத்தல்களை வீட்டிலிருந்து கொடுத்தனுப்புவார்கள். செட்டாக பள்ளிவாசலில் இருக்கும் அலுமினிய/எவர்சில்வர்  டம்ளர்களில் சுடச்சுட சுக்குக் காப்பி விளம்பப்படும். கூட வரும் நண்டு சிண்டுகளையும் ஒதுக்கிவிடுவதில்லை. சுக்கு மிளகு காரத்தில் மூக்கை உறிஞ்சியபடியே காப்பியையும் உறிஞ்சிக் கொள்ளும்.  அவற்றுள் சில ம்மாவின் தொழுகைப் பாயின் அருகிலேயே படுத்து உறங்கியும் விடும்… எண்பதுகளின் நடுவில்   ரஸ்னா, ட்ரிங்கா என சர்பத்கள் ஊர்தோறும் அறிமுகமான பிறகு, தொழுவோருக்கு ரஸ்னா கரைத்துக் கொடுத்து விடுவது வழமையாயிற்று. அதனுடனே சர்பத் விளம்புவதற்கான பிளாஸ்டிக் டம்ளர்களும் பள்ளிவாசலில் வந்துவிட்டன.

ரமலானின் சில இரவுகள் குறிப்பாக பன்னிரண்டாம் இரவு இருபத்தேழாம் இரவு போன்றவை கூடுதல் சிறப்பு மிக்கவை. அப்போது சுக்குக் காப்பியுடன் பூந்தி போன்ற ஏதாவது இனிப்பும் வாழைப்பழமும் (பள்ளிவாசல் கணக்கிலேயே) வழங்கப்படும். இருபத்தேழாம் இரவுக்குக் கண்டிப்பாக ஜவ்வரிசிக் கஞ்சி (பாயாசம்தான், ஆனால் பசும்பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால்  சேர்த்துச் செய்வது) அல்லது ஃபிர்னி கொடுப்பார்கள்.

ஃபிர்னி எனச் சொல்லும்போதே அதைப் போன்றதொரு இனிய நினைவு மனதில் தோன்றுகிறது…  ஒரு நோன்பு காலத்தின் இரவு. நான்கோ ஐந்தோ வயது சிறுமியான நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறேன். ஏதோ கனவுபோல் என் மோராத்து வாப்புமாவின் குரல் காதில் கேட்கிறது… “ஜமிக்கண்ணு எந்தங்கம் எந்திமா எந்திச்சு இன்னபாரு… ஒனக்குப்  புடிச்ச கஞ்சி நீ குடிப்பியே இன்னா” என்று சொல்லியபடியே என்னை அசைத்து எழுப்பும் கைகள். விழித்தும் விழிக்காமலும் இருந்த என்னை நெஞ்சோடணைத்தவாறே இனிப்பான கஞ்சியை என் வாயில் ஊட்டுகிறது அவர் கரம். அரைத்தூக்கத்தினூடே வாயிலும் தொண்டையிலும் இறங்கிய அந்த இனிமையை நெஞ்சும் அறிய சுவைத்து விழுங்குகிறேன். “நல்லா இருந்துச்சா குட்டிப்பிள்ள” என்று சிரிப்புடன் கேட்ட அவர் குரலில்  நெஞ்செல்லாம் இனிப்பாய் நிறைய  மீண்டும் தூங்கி விடுகிறேன்.

காலம் ஓடுகிறது. நாம் என்றோ கண்ட கனவு திடீரென நினைவில் மோதுவதுபோல் இந்நினைவு மீண்டும் மனத்திரையில் விரிகிறது. இப்போது எனக்குப் பல எண்ணங்கள். எங்கள் வாப்புமாவின் தங்கைகளான  மொகுதும் பாத்திமா என்ற மோராத்து வாப்புமாவும் (இந்தப் பெயர்கள் படும் பாட்டைப் பற்றி இன்னும் நிறையச் சொல்லலாம். பிறகொரு சமயம் கட்டாயம் சொல்கிறேன்), ரசிதா வாப்புமாவும் ஒரே வீட்டில் அண்ணன் தம்பிக்கு இரண்டாம் தாரங்களாக வாழ்க்கைப்பட்டிருந்தவர்கள். மோராத்து வாப்புமாவுக்குக் குழந்தைகள் இல்லை. தன் தங்கையான ரசிதாவின்  மக்களையே தன் மக்களாக வளர்த்தவர். அவர்கள் வீடு எங்களுக்கு அடுத்த தெருவில் இருந்தது.

தஞ்சையில் தராவீஹ் தொழுகையில் பெண்கள் https://www.dailythanthi.com/News/State/special-prayers-in-tanjore-mosques-742650

அப்போதெல்லாம் இருபத்தேழாம் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பின் தொழவந்தவர்களுக்கு ஃபிர்னி கஞ்சி வழங்குவார்கள். அந்தச் சமயத்தில் எங்கள் வீடுகளில் நான்தான் சிறுபிள்ளை. அதிலும் இந்த மாதிரி இனிப்புகளை விரும்பி உண்ணும் இயல்புமுண்டு. அதனால் தனக்குக் கிடைத்த அந்தச் சிறு கோப்பை ஃபிர்னியை அங்கேயே பள்ளியில் வைத்துக் குடித்து முடிக்காமல்,  தொழுதுவிட்டு வந்த அந்த இரவோடு இரவாக தெரு கடந்து வந்து தூங்கும் சிறுமியான என்னை எழுப்பி வாயில் ஊட்டி திருப்தி கொண்டிருக்கிறார்கள்!

ஆனாலும் வாப்புமா அப்படிச் செய்யவேண்டிய கட்டாயம் என்ன? அந்த இனிப்பை அவர் அப்போதே தன் வாயில் வைத்திருந்தால் என்ன குறைந்திருக்கும்? இல்லை நீ அந்தத் தெருவுக்கு இப்போதே போய் உன் லாத்தாவின் பேத்திக்கு ஊட்டியே ஆகணும் என்று எவரும்  கட்டாயம்தான் செய்தாரா ஒன்றுமேயில்லையே…? நிர்பந்தம் ஏதும் இல்லாதபோதும் மெனக்கெட்டு வந்து ஊட்டத் தூண்டிய அந்தப் பாசத்தை எண்ணி வியந்துதான்  நிற்கிறேன் இப்போதும்.

இவரைப் பற்றிச் சொல்ல இன்னும் கொஞ்சம் உண்டு. அன்றைய என் பாட்டி  தலைமுறையில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்த வெகுசில முஸ்லிம் பெண்களில் மோராத்து வாப்புமாவும் ஒருவர். ‘நபிமார்கள் சரித்திரம்’ என்ற கனத்த புத்தகத்தை அவர் வாசிக்க அவரைச் சுற்றியிருந்து பெண்கள் அதைக் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். அரபி குர்ஆனும் நன்கு ஓதுவார். அவர்கள் இராட்டை நூற்பதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு பக்கம் பஞ்சை வைத்துத் திரித்து அப்படியே அறுபடாமல் நூலாக்கிக் கொண்டுவந்து மறுபக்கம் கண்டில் சுற்றுவதையும், சுற்றச் சுற்ற  கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கண்டு தடிப்பதையும் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்த பொழுது போக்கு. அப்புறம்  நூற்ற நூல் கண்டுகளை ‘பஞ்சாபீஸில போய்க் குடுத்துட்டு வருவோம் வா’ என்று என்னையும் அவர்களோடு கூட்டிக்கொண்டு போவார்கள். கூட்டுறவுச் சங்கம்தான் ‘கோப்பரேட்டு அல்லது பஞ்சு ஆபீஸ்’ என்று வாப்புமாக்களால் அழைக்கப்பட்டது  அப்போது.

எனக்கு முதல் பேறுகாலத்தின்போது நிறைமாதத்திலிருந்து குழந்தை பிறந்த நாற்பது நாட்கள் வரை எங்களுடனே இருந்து, பேறுகால உதவிகள்  அத்தனையும் செய்தவர். என் மகள் கைக் குழந்தையாகத் தொட்டிலில் படுத்துத் தூங்குவேனா எனச் சாதிக்க, தரையில் அமர்ந்து தொட்டிலோடு பிள்ளையை அணைத்தவாறே அவர் ‘லாஇலாஹா இல்லல்லாஹு’ தாலாட்டுப் பாடல் பாடித் தூங்க வைக்க முயல்வதும், நான் அருகில் கட்டிலில் படுத்தவாறே இரவு விளக்கின் நீல ஒளியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்ததும் என எங்கள் மோராத்து வாப்புமாவோடு என் நினைவுகள் எப்போதுமே மறக்க இயலாதவை.

எப்போதோ தத்தம் கணவரது அரவணைப்பை இழந்துவிட்டிருந்த என் வாப்புமாமார்களை எல்லாம் இப்போது  முதுமை அரவணைத்துள்ளது. ரசிதா வாப்புமாவின் கணவர், அவருடைய மூத்ததாரம் தங்கள் ஒரேயொரு மகனை பதின்மூன்று வயதில் பறிகொடுத்து இல்லறவாழ்வில் விருப்பின்றி இருந்த நிலையில்தான், ரசிதா வாப்புமாவை  இளைய தாரமாக  மணந்து கொண்டார்.  அந்த மூத்த தாரம் தன் முதுமையில் மதிபிறழ்ந்து வாய் உளறும் தன்நினைவற்ற நிலையில் இருந்தார். இருக்க இடமும் உண்ண உணவும் உண்டுதான் அவருக்கு. ஆனால் மதியற்று கழிந்ததால் மாசடைந்த ஆடைகளைக் கழுவவும், அவரைக் குளிப்பாட்டித் தூய்மை செய்யவும் யாரைத் தேடமுடியும்? உடையையும் உணவையும் தருவதைவிட கடினமான பணியல்லவா அது?

அப்போதும் தன் தங்கையின் சக்களத்திக்கு யாரும் செய்யத் தயங்கும் சேவைகளை முகம் சுளிக்காமல் செய்தவர் மோராத்து வாப்புமா. அதைக் கண்டு அப்போதும் வியந்து நின்றிருக்கிறேன் இவருக்கென்ன நிர்பந்தம் என… என்னுடைய அந்த வயதில் எனக்குத் தோன்றியதை அப்படியே  வாப்புமாவிடம் கேட்கவும் செய்கிறேன், “நீங்க ஏன் வாப்புமா இதெல்லாம் செய்யணும்” என… வாப்புமா தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு சொன்னார், “ஆ! அப்டிலாம் நெனக்கக்கூடாது தங்கம். எனக்கு எங்கூடப் பொறந்தவ பிள்ளைளுவொ, எந்தங்க மக்கமாரு நீங்க இருக்கியோ. இல்லாட்டா நானும் அவள மாதிரிதானமா… எல்லாத்துக்கும் அந்த அல்லாதாம்மா பாதுகாவல்.”

இதற்கெல்லாம் பிறகுச் சில வருடங்கள் கழித்து ஏரலை விட்டு வந்து சென்னையில் தன் தங்கை மகன்களின் ஆதரவில்தான் இருந்தார்கள் வாப்புமா. அப்போது நானும் சென்னையில் வசிக்கவந்து, பிள்ளைகள் இங்கேயே பள்ளி சென்று கொண்டிருந்த காலம். சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்த  வாப்புமாவை அடிக்கடி போய் பார்த்து வருவேன்.  அப்படித்தான் ஒருநாள் தன் தங்கை மக்களின்,  பேரன்களின் தோள்களிலேறி சந்தனமும் சாம்பிராணியும் மணமணக்க அழகான பச்சைப் போர்வை போர்த்திய சந்தூக்கில் (உடலைச் சுமந்து செல்லும் பெட்டி ) ஜம்மென்று அவர் செல்வதைக் கண்டு நிற்கின்றபோது மனதில் ஒன்று தோன்றியது.

https://medium.com/@memori.io/12-essential-items-for-islamic-jenazah-preparation-b69dd89685e4

‘பலரும் தங்களுக்குக் கைகால் திடத்தோடு இருக்கும்போதே நல்ல மரணம் வாய்த்துவிட வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பர். என் மோராத்து வாப்புமா போன்று சிலர் மட்டும் தங்கள் வாழ்வையே பிரார்த்தனையாய் ஆக்கிக் கொள்வர் போலும்…’ தம்மைப் பற்றிய அழகான நினைவுகளை மட்டுமே விட்டுச்செல்லும் வண்ணம் வாழப் பெற்றவர்கள் பேறுடையவர்கள்தான் என்னைப் பொறுத்தவரை.

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.

Exit mobile version